தசை தளர்ச்சி நோய்: முழு குணமாகாது ஆனாலும் தீர்க்க முடியும்

தசை தளர்ச்சி நோய்: முழு குணமாகாது ஆனாலும் தீர்க்க முடியும்

தசை தளர்ச்சி நோய் (மையோசைட்டீஸ்) முழு குணமாகாது ஆனாலும் தீர்க்க முடியும்

உடலின் நோய் எதிர்ப்பாற்றல் என்பது இயற்கையாகவே ஒவ்வொரு உயிரிலும் உண்டு. இது பொதுவாக உடலுக்கு எதிராக இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் உடலில் இருக்க அனுமதிக்காது என்பது தான் நாம் அனைவரும் அறிந்ததே. 

அதற்கு மாறாக நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறனே நமது உடலில் உள்ள தசை செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு அந்த செல்களை அழிப்பது தான் தசை தளர்ச்சி நோய் ‘மையோசைடிஸ் நோய்’ என்பதாகும். இதை அறிவியல் ரீதியாக ‘இடியோபதிக் இன்ஃப்ளமேட்டர மையோசைட்டீஸ்’ என்பர்.

தசை தளர்ச்சி நோய் இரு பாலருக்கும் வரும் என்றாலும் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. ஒரு லட்சம் பேரில் 22 பேருக்கு வருவதாக புள்ளி விபரக் கணக்கு தெரிவிக்கிறது. 

நோயின் அறிகுறிகள்:

1. உடலை எப்போதும் சோர்வாகவே வைத்திருக்கும். 

2. தசைகளில் வீக்கம் ஏற்படுவதோடு அதிக வலியையும் கொடுக்கும். இதனால் உட்கார்ந்து எழுந்து நடப்பதில் சிரமம் போன்ற பல கஷ்டங்களைக் கொடுக்கும்.

3. பேசுவதில் கூட தடுமாற்றம், சிரமம் அளிப்பதோடு குரலில் வித்தியாசம் ஏற்படும். 

4. பசியின்மை இருப்பதோடு உணவினை விழுங்குவதிலும், நீர் பருகுவதிலும் சிரமம் இருக்கும்.

5. மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கூட ஏற்படும்.

6. மார்பகப் பகுதிகளில் தடிப்புகள் ஏற்படும்.

நோயின் நடைமுறை: 

பொதுவாக பழைய திசுக்கள் பழையதாகி அழியும்போது புதிய திசுக்கள் ஏற்படுவது நடைமுறை. அவ்வாறு இல்லாமல் இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலின் எதிர்வினையால் தசை அழற்சி ஏற்பட்டு செல்கள் சிதைவுக்கு உள்ளாகி விடும். இதை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் மருத்துவம் பார்க்காமல் இருந்தால்,  இயல்பான நடைமுறையிலிருந்து முடக்கி படுத்த படுக்கையாகி விடும். தசை செல்கள் முழுமையாக அழியக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். 

பாதிப்பின் உச்சகட்டமாக உணவு உண்ணும்போது உணவானது உணவுக் குழாய்க்குச் செல்லாமல் சுவாச குழாய்கள் வழியாக உணவு செல்ல ஆரம்பிக்கும். இதனால் திடீர் உயிரிழப்புக்கூட ஏற்படும். இதற்கு ‘ஆஸ்பிரேசன் நிமோனியா’ என்பர்.

நூறில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்புண்டு.  தோலினால் பிரச்சினை உருவாகும் பட்சத்தில் ஏற்படும் அழுத்த நோய்க்கு ‘டெர்மோ ஆர்த்தரைட்டீஸ்’ என்றும் தோல் தவிர்த்த மற்ற பிரச்சனைகளை ஏற்படும் போது அந்த நோய்க்கு ‘பாலி மையோசைட்டீஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.

மருத்துவ உலகம் இதற்கான முழுமையான தீர்வு அளிக்க இயலாது திணறிக் கொண்டிருக்கிறது. பொதுவாக மழைக்காலத்தில் அதிகம் பேர் பாதிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறது.   ஆரம்பநிலை பரிசோதனை அவசியம் என்ற போதும் இது இன்ன நோய்தானா என  உறுதியாகாத நிலை ஏற்படும்போது ஆரம்ப நிலை சோதனை எடுக்க இயலாத பரிதாப நிலை ஏற்படுகிறது.

அலோபதி ஆங்கில சிகிச்சை முறைகள்:

மூட்டுகளில் உள்ள இணைப்பு திசுக்கள் பாதிப்பதால் ‘ருமட்டாய்டு’  மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பு அவசியம் ஏற்படுகிறது. ‘ஸ்டீராய்டு’ மருந்துகளே அதிகம் அளிக்கப்படுகிறது.

தசைகளை வலிமைப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் எடுப்பதால் ‘ரத்தக் குழாய் அழற்சி நோய்’, நுரையீரல் மற்றும் இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

இலவச சிகிச்சை:

தசை தளர்ச்சி நோய்க்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவம் செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு சுமார் 50 ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது.

மருத்துவ ஜோதிட காரணங்கள்:

குரு 6ஆம் அதிபதி ஆகி ராகு ஆறாமிடத்தில் பலவீனமாக இருந்தாலும், அல்லது ராகு கேது குருவுடன் சம்பந்தப்பட்டாலும் தசை வாதம், தசை பிடிப்பு, மூட்டுடன் இணைந்த தசை பிரச்சனைகள் ஏற்படும். லக்னாதிபதி, ராசி அதிபதி மற்றும் சந்திரன் பலம் அற்ற நிலையிலும், அதன் திசா புக்திகளில் இது போன்ற தசை சார்ந்த பிரச்சனைகள் வருவது இயல்பு.

செவ்வாய் சாரமான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்கள் உறுப்புகளை மடங்கி விரித்து செயல்படும் உறுப்புகளைக் குறிக்கிறது.  மிருகசீரிஷம் கழுத்துப் பகுதியையும்,  சித்திரை இடுப்புப் பகுதியையும்,  அவிட்டம் முழங்கால் கணுக்கால் சார்ந்து இருப்பதன் அடிப்படையிலும், இது சார்ந்த இடங்களில் மேற்கண்ட பிரச்சனை அதிகமாகும்.

பாரம்பரிய மருத்துவ வழிமுறைகள்:

தசை தளர்ச்சி நோய்: முழு குணமாகாது ஆனாலும் தீர்க்க முடியும்

தசை தளர்ச்சி நோய்க்கு மருந்து இல்லை என்கிற நிலையில் நோயினைத் தீர்க்க இயலாத நிலையில் அந்நோயைத் தீர்க்காவிடினும் அந்நோயால் ஏற்படும் கடுமையான தசை வலியின் கடுமையை குறைக்கும் பட்சத்தில் மூலிகை மற்றும் கடைச்சரக்குகளைப் பயன்படுத்தி அவர்களை வலியிலிருந்து ஓரளவு மீட்டு ஆசுவாசப்படுத்தலாம் என்பது எனது அனுபவ ரீதியான நம்பிக்கை.

அதனடிப்படையில் வீக்கம் தீர்க்கும் வெளிப்பூச்சுத் தைலம், வலியினைப் போக்கும் குப்பி மற்றும் சூரணம் குறித்து விளக்கி இருக்கிறேன்.

முடக்கத்தான்

பொதுவாக மூட்டுக்களில் ஏற்படக்கூடிய முடக்கினை நீக்கக்கூடிய அற்புதமான விஷயம் ‘முடக்கத்தான்’ என்கிற ஒரே மூலிகைக்கு உண்டு. 

இந்த முடக்கறுத்தான் சமூலம், மூக்கிரட்டை கீரையின் பஸ்பம் போன்றவற்றை எண்ணெயில் காய்ச்சி தைலமாக வெளிப்பூச்சுக்கு கொடுக்கும் பொழுது இப்பிரச்சினையால் வரக்கூடிய கடுமையான வலியில் இருந்து ஓரளவு தப்பிப்பதற்கு அல்லது 80 சதவீத வலி நிவாரணியாக பயன்படுகிறது.

அதேபோல் இதற்கான முடக்கு நீக்கி குப்பிகளைப் பயன்படுத்தலாம். இதில் முடக்கறுத்தான், மூக்கிரட்டை, கஸ்தூரி, கந்தகம், லிங்க செந்தூரம் மற்றும் கொம்பரக்கு போன்றவை இதில் அடிப்படைப் பொருட்களாக இருக்கின்றன. இவை அந்த தசை சார்ந்த முடிவுகளை எடுப்பதில் வல்லமை வாய்ந்தவை.

முடக்கு அருகு சூரணம்

‘முடக்கு அருகு சூரணம்’ என்று ஒரு சிறப்பான சூரணம் இருக்கிறது இது நெல்லிக்காய், கடுக்காய், அதிமதுரம், அமுக்கரா, பூனைக்காலி, பசலைக் கீரை, கண்ணு பூலைப்பூ, யானை நெருஞ்சில், சிறு நெருஞ்சில், முடக்கறுத்தான், பச்சைக் கற்பூரம், மிளகு, சீரகம், சோம்பு, பெருங்காயம், மல்லித்தூள், காக்கரட்டான், ஜாதிக்காய், வாதநாராயன் இன்னும் பல கடைச் சரக்குகளைச் சேர்த்து இந்த முடக்கருகு சூரணம் செய்யப்படுகிறது. 

இந்த மாதிரி சூரணம் டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்கன் குனியா போன்ற காலங்களில் அந்த காய்ச்சல் முடிந்த ஒரு பத்து இருபது நாட்களுக்கோ அல்லது தொடர்ந்து அவர்களால் உட்கார முடியாமல் எழுந்திருக்க முடியாமல் முட்டு வலி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்ட சூழ்நிலையில் இந்த முடக்கம் நீங்க மிகவும் உறுதுணையாக இருக்கும். 

இதை அனுபவரீதியாக அவர்களுக்குக் கொடுத்து உடனே அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஆகவே இந்த நோயை தீர்க்க முடியாது என்று இருந்த போதிலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நாம் அந்த வலியை குறைப்பதற்கும் இது போன்ற சூரணங்களையும், வெளிப்பூச்சுத் தைலங்களையும்  பயன்படுத்துவது மிகச்சிறப்பு.

மேலும் மருத்துவ ஆலோசனைகளுக்கு +91 90803 75278 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *