தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு வேகமாக ஓடினாள் சார்மியான். ஆனால், அது பலமாகப் பூட்டப்பட்டிருந்தது. அதனால் கதவை வேகமாகத் தட்டினாள்.
“அரசியாரே… நான்தான் சார்மியான். இப்போதுதான் நான் எல்லாவற்றையும் அறிந்தேன். நீங்கள் தவறாக எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள். தயவு செய்து கதவை திறந்து விடுங்கள்…”
சார்மியான் போட்ட அலறலில் கிளியோபாட்ராவின் பாதுகாப்புக்கு நின்றிருந்த ஆக்டேவியனின் வீரர்கள் சிலர் அங்கே வந்துவிட்டனர்.
“இங்கே என்ன நடக்கிறது? ஏன் இப்படி கத்துகிறீர்கள்?”
“இப்போது நாங்கள் கத்தாவிட்டால், வேறு எப்போதும் கத்த முடியாது.”
“தேவையில்லாமல் கத்திவிட்டு எங்களை கேலி செய்கிறீர்களா?”
“அய்யோ… அதுபற்றி பேச இப்போது நேரமில்லை. இந்த கதவை இப்போது உடையுங்கள். அதன்பிறகு மற்றவற்றை கூறுகிறேன்” என்று சார்மியான் சொல்ல… ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்று பயந்து போன ஆக்டேவியனின் வீரர்கள் அசுர வேகத்தில் இயங்கி கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கிளியோபாட்ராவின் படுக்கையறை என்பதால், அந்த அறையின் கதவு அழகாக மட்டுமின்றி மிகவும் பலமாகவும் இருந்தது.
ஒருவழியாகப் பலவித முயற்சிகளுக்கு மத்தியில் அந்தக் கதவை உடைத்து திறப்பதற்குள் நேரம் வேகமாக ஓடிப்போய் இருந்தது.
அதிர்ச்சியடைய வைத்த காட்சி
படுக்கையறைக்குள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. மின்னும் தங்கம் பதிக்கப்பட்டிருந்த படுக்கையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் கிளியோபாட்ரா. கொடிய நச்சுப் பாம்பான ‘அஸ்ப்’ தன்னைத் தீண்டியதில் அவள் எல்லாவற்றையும் மறந்திருந்தாள்.
இதையறிந்த ஆக்டேவியனின் வீரர்கள் ஆக்டேவியனிடம் நடந்த சம்பவத்தைக் கூற பதற்றத்தோடு ஓடினர்.
அடுத்த சில நிமிடங்களில் ஆக்டேவியன் முன்பு ஓடிப்போய் நின்றனர்.
அவர்கள் வந்த வேகத்தைப் பார்த்த ஆக்டேவியன், அலெக்ஸாண்டிரியா நகருக்குள் கடல்தான் புகுந்து விட்டதோ என்று அஞ்சினான்.
“என்ன நடந்தது? ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள்?”
“அரசே! கிளியோபாட்ராவை பாம்பு கடித்துவிட்டது.”
“என்ன சொல்கிறீர்கள்? அவளது பாதுகாப்புக்குத்தானே நான் உங்களை அங்கு காவல் பணியில் ஈடுபடச் சொன்னேன். பாம்பு அவளை கடிக்கும் வரை அங்கே வேடிக்கையா பார்த்துக்கொண்டு இருந்தீர்கள்?” ஆக்டேவியனின் பேச்சில் கோபம் கொந்தளித்தது.
“அப்படி இல்லை அரசே! அவளே தன் மீது பாம்பை விட்டு கடிக்கச் செய்துவிட்டாள்…”
“என்ன உளறுகிறீர்கள்?”
“உளறவில்லை அரசே! இதுதான் உண்மை. இதுதான் அங்கே நடந்தது.”
“இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் இப்போதே அரண்மனை வைத்தியரை அங்கே அழைத்துச் சென்று அவளது உயிரை காப்பாற்றி விடுங்கள். நான் சிறிது நேரத்தில் அங்கே புறப்பட்டு வருகிறேன். கிளியோபாட்ரா உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் நான் உங்களை சும்மா விட மாட்டேன்; ஜாக்கிரதை!”
ஆக்டேவியனின் அதிரடி உத்தரவை அடுத்து மறுபடியும் வேகமாக ஓடி மறைந்தனர் அந்த வீரர்கள். அவர்கள் அடுத்ததாக சென்ற இடம் அரண்மனை வைத்தியர் வீடு.
நன்றாகச் சாப்பிட்டு விட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வைத்தியரை படாத பாடுபட்டு எழுப்பி கிளியோபாட்ராவைக் காப்பாற்ற அழைத்துச் சென்றனர் வீரர்கள்.
அங்கே அவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி.
கிளியோபாட்ரா தங்கப் படுக்கையில் இறந்து கிடக்க… அவளது காலடியில் இராஸ் இறந்து கிடந்தாள். இன்னொரு தோழியான சார்மியான், கிளியோபாட்ராவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவளது தலையில் மணிமுடி கிரீடத்தைத் தாங்கிப் பிடித்த நிலையில் கிடந்தாள்.
அரண்மனை வைத்தியர் வேகமாக ஓடி வந்து பரிசோதித்தபோது சார்மியானுக்கு மட்டும் உயிர் இருந்தது. ஆனால், அவளுக்கு முதலுதவி செய்ய வைத்தியர் தயாராகும்போதே அவளும் இறந்து போனாள்.
கடிதம் சிக்கியது
அந்த அறையில் என்ன நடந்தது? என்கிற அடுத்தக்கட்ட ஆய்வில் கிளியோபாட்ரா ஆக்டேவியனுக்கு தன் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது.
“இளைய சீஸருக்கு கிளியோபாட்ரா எழுதும் கடைசி கடிதம். ஆண்டனியையும் இழந்து, சொந்த ராஜ்ஜியத்தையும் இழந்து என்னால் வாழ முடியாது. அதனால், தற்கொலை செய்ய முடிவெடுத்து இருக்கிறேன். என்னுடைய மறைவுக்குப் பிறகு எனது உடலை ஆண்டனியின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யவும். இப்படிக்கு கிளியோபாட்ரா”
இப்படிச் சொன்னது அந்த கடிதம்.
கிளியோபாட்ராவும், அவளது தோழியர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிந்த ஆக்டேவியன் பெரிதும் கவலை கொண்டான்.
‘எகிப்தை வெற்றி கொண்ட விழாவை ரோமாபுரியில் வெகு அமர்க்களமாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்து இருந்தேனே… கடைசியில் இப்படி ஆகிவிட்டதே…’ என்பது போல் முகத்தை சுருக்கிக் கொண்டு, அரண்மனை வைத்தியரிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டான்.
“அஸ்ப் என்பது ஒருவகை நச்சுப் பாம்பு. அளவில் சிறிய இந்த பாம்பு கடித்து விட்டால் பலவந்தமான மரணப் போராட்டமே இருக்காது. எளிதில் உயிர் பிரிந்து விடும். அதனால்தான் கிளியோபாட்ரா இந்தப் பாம்பைத் தனது தற்கொலை முடிவுக்கு பயன்படுத்தி இருக்கிறார். அவரது வேண்டுகோளின் பேரிலேயே இந்த பாம்பு அரண்மனைக்கு அத்திப் பழங்கள் நிறைந்த கூடையில் மறைத்து வைக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
… முதலில் கிளியோபாட்ராவே, படுக்கையறை கதவை பூட்டிக் கொண்டு தன் மேனியில் இந்த நச்சுப் பாம்பை கடிக்க விட்டு இருக்கிறார். கதவை உடைத்து திறந்து பார்த்த தங்களது வீரர்கள் பதற்றத்தில் நடந்த விவரத்தை தங்களிடம் தெரிவிக்க வந்துவிட்டனர். அதேநேரம், தங்கள் அரசியின் தற்கொலை முடிவை தாங்க முடியாத அவரது தோழியரான இராசும், சார்மியானும் அவருடனேயே அதே பாம்பை தங்கள் மீது கடிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மற்றபடி, இவர்களது தற்கொலையில் வேறு யாருக்கும் சம்பந்தம் இல்லை…” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் அரண்மனை வைத்தியர்.
முடிந்தது சகாப்தம்!
நடந்த சம்பவத்தின் மூலம் எகிப்து பேரரசியாக, உலகப் பேரழகியாக வலம் வந்த ஏழாம் கிளியோபாட்ராவின் வாழ்க்கையோடு, எகிப்தின் டாலமி அரச வம்சத்தின் சகாப்தமும் நிறைவுக்கு வந்தது. அப்போது அவளுக்கு வயது 39.
கிளியோபாட்ராவின் உயிர் தியாகத்தைக் கண்டு பிரமித்த ஆக்டேவியன், அவள் விருப்பப்படியே ஆண்டனியின் சமாதிக்கு அருகில் அவளது உடலை அடக்கம் செய்தான்.
கிளியோபாட்ராவுக்குப் பிறகு எகிப்தானது ரோமப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
கிளியோபாட்ரா மறைந்து 20 நூற்றாண்டுகள் கடந்து விட்டாலும், அவள் உலக மக்கள் மனங்களில் என்றும் உலகப் பேரழகியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இன்னமும் வாழ்வாள்…
-முற்றும்

பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.