தலையாறு அருவி

காமாட்சியம்மன் உருவாக்கிய தமிழகத்தின் உயரமான அருவி

நாம் ஏற்கனவே எலிவால் அருவி என்றழைக்கப்படும் தலையார் அருவி பற்றியும் மூங்கிலணை காமாட்சியம்மன் பற்றியும் பார்த்தோம். இந்தப் பதிவில் அந்த அருவியின் அடிவாரத்திற்கு செல்லும் விதத்தையும் அங்கிருக்கும் மர்மமான கோயில் பற்றிய வரலாற்றையும் பார்ப்போம்.

இந்த அருவிக்கு செல்லவேண்டுமென்றால் வத்தலகுண்டு மற்றும் பெரியகுளம் சாலையில் இருக்கும் தேவதானப்பட்டி என்ற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து 8 கிமீ தொலைவில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் அங்கு விஷேசமாக இருக்கும். குடும்பம் குடும்பமாக மக்கள் வழிபட்டு வருவார்கள். அப்படியொரு ஆடிப் பதினெட்டு அன்று தேவதானப்பட்டிக்கு சென்றோம். அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அம்மா மெச்சுக்கு போனோம். பாதை ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் போகப்போக கரடு முரடாக மாறுகிறது.

காமாட்சியம்மன் கோயில்

தேவதானப்பட்டியிலிருந்து மூன்று கிமீ தொலைவில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் வருகிறது. அங்கிருந்து மேலும் இரண்டு கிமீ பயணித்தால் மஞ்சளாறு அணை வருகிறது. மூன்று பக்கங்களும் மலைகள் சூழ, பள்ளத்தாக்கில் ஒரு ஏரி போல் காட்சியளிக்கும் இந்த அணை அழகின் பொக்கிஷம். மஞ்சளாறு அணை மிகத் தாழ்வான ஒரு பெரிய தடுப்பணை போல்தான் இருக்கிறது. ரசாயனக் கழிவுகள் எதுவும் கலக்காமல் இயற்கையான நீர்த்தேக்கம் என்பதால் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் ஆரோக்கியம் நிறைந்து இருப்பதாக இந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள். காமராஜர் முதல்வராக இருந்தபோது கட்டத்தொடங்கிய இந்த அணையை பக்தவச்சலம் திறந்து வைத்தார்.

தலையாறு
தலையாறு படம்: எஸ்.பி.செந்தில் குமார்

மஞ்சளாறு அணையின் இரண்டு பக்கத்தில் இருந்தும் அம்மா மெச்சுக்கு செல்ல பாதைகள் இருக்கின்றன. அணையை கடந்து செல்லும் பாதையில் செல்வது தூரம் குறைவானது. ஆனால் பாதை படு மோசமானது. இந்த கரடுமுரடான பாதையில் சாதாரணமாகவே குலுங்கும் டீசல் ஷேர் ஆட்டோவில் பயணிக்க தனி தெம்பு வேண்டும். அந்த மேடுபள்ளத்திலும் வேகத்தை குறைக்காமல் செல்லும் ஆட்டோக்களை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த ஆட்டோகளில் பயணம் செய்வதே ஒரு சாகசம் போல்தான் இருக்கிறது.

கடைசியாக காட்டின் நுழைவாயிலில் நம்மை இறக்கிவிடுகிறார்கள். இங்கிருந்து நடந்து செல்லவேண்டும். கிளைமேட் அற்புதமாக இருந்தது. மழை சாரலாக பொழிந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் நிற்பதும், பின்னர் தூரல் போடுவதுமாக இயற்கை அற்புதம் செய்தது. வானம் மேகமூட்டத்துடன் வலம் வந்தது. மழைக்கு ஒதுங்க இடம் இல்லாததால் எல்லோரும் மழையில் நனைந்தபடியே நடந்து கொண்டிருந்தார்கள்.

இந்தப் பதிவை காணொளியாக இங்கே காணாலாம்..

 

சிறிது தொலைவு நடந்ததும் மூங்கில் மரத்தின் அடியில் கல்லில் செதுக்கப்பட்ட திரிசூலமும் அதனருகே ஒரு விநாயகர் சிலையும் சிறிய வடிவில் இருந்தன. அதற்குமுன் ஒரு திரிசூலமும் நட்டுவைக்கப்பட்டிருந்தது. இங்கிருந்து காமாட்சியம்மனின் எல்லை ஆரம்பம் என்பதை குறிக்க இந்த அடையாளம். இங்கு காமாட்சி கன்னி தெய்வமாக இருப்பதால் ‘பொண்ணும் புரசும் உள்ளே பிரவேசிக்கக்கூடாது. யாரும் மது அருந்தக்கூடாது.’ என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதனை வணங்கிவிட்டு பயணத்தை தொடங்கினார்கள் மக்கள். சிறு குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் நடந்து கொண்டிருந்தார்கள்.

தேவதானப்பட்டி

தேவதானப்பட்டிக்கு வங்கிசாபுரி, தலேச்சுரம் என்று முன்னாளில் பெயர்கள் இருந்தன. இந்தப் பகுதியில் தெய்வங்கள் அதிகமாக இருந்ததால் அந்த தெய்வங்களை வழிபட பாண்டிய மன்னன் தானமாக இந்த இடத்தை வழங்கினான். அன்றிலிருந்து இந்த இடம் ‘தெய்வதானப்பதி’ என்றானது. அது காலப்போக்கில் மருவி ‘தேவதானம்’ என்றானது. பின்னர் தேவதானப்பட்டி என்றாகி விட்டது.

நாம் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காட்டுப்பகுதிக்கு முன்னாளில் காஞ்சனா என்ற பெயர் இருந்தது. இந்தப் பகுதியை சூலபாணி என்ற அரக்கன் ஆண்டு வந்திருக்கிறான். அவன் சிவபெருமானிடம் பல அரிய வரங்களைப் பெற்றிருந்தான். தன்னைக்காட்டிலும் அதிக வலிமையுடனும் அரிய சக்திகளுடன் கூடிய ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று கடுந்தவம் மேற்கொண்டான். அந்த தவத்தின் பலனாக வச்சிரதந்தன் என்ற மகன் பிறந்தான். பிறக்கும்போதே அந்தக் குழந்தையிடம் ஏகப்பட்ட அரிய சக்திகள் இருந்தன.

தந்தைக்குப் பின் அவன் மன்னனானான். அவன் காட்டில் தவம் செய்யும் முனிவர்களையும் வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்த தொடங்கினான். அவனிடம் ஏராளாமான சக்திகள் இருந்ததால் யாராலும் அவனை எதிர்க்க முடியவில்லை. முனிவர்கள் ஒன்று சேர்ந்து பிரம்மனிடம் சென்று வேண்டினார்கள். அவரும் அந்த அரக்கனை அழிப்பதற்காக தேவேந்திரனை அனுப்பி வைத்தார். தேவேந்திரனோ அரக்கனின் தளபதியான துட்டபுத்தியின் தாக்குதலைக் கூட தாங்கமுடியாமல் போர்க்களத்திலிருந்து ஓடினான். ஓடியவன் நேராக பராசக்தி காமாட்சியம்மனாக குடிகொண்டிருக்கும் காஞ்சிபுரம் சென்று அம்மனிடம் முறையிட்டான். அரக்கனை அழிக்கும்படி மனமுருக வேண்டினான்.

துர்காதேவி

வேண்டுதலுக்கு மனம் இறங்கிய அம்மன் துர்காதேவியை போரிட அனுப்பி வைத்தார். துர்காதேவியும் இந்த வனப்பகுதிக்கு வந்து வச்சிரதந்தனிடம் போரிட்டார். அரக்கனின் தலையைத் துண்டித்தார். அவன் மறுநிமிடமே சிங்கத்தலையுடன் எழுந்து நின்றான். அந்தத் தலையையும் வெட்டி வீழ்த்தினார். அடுத்த நிமிடமே புலித் தலையுடன் நின்றான். இப்படியே தாலையை வெட்ட வெட்ட மீண்டும் வேறுவேறு விலங்குகளின் தலையுடன் நின்றான். இவனை ஒழிக்க காமாட்சியம்மன் ஒருவரால் மட்டுமே முடியும் என்று எண்ணிய துர்க்காதேவி தோல்வியோடு திரும்பினார்.

துர்காதேவி தோல்வியடைந்து திரும்பியதைக் கண்ட காமாட்சியம்மன் கடுங்கோபம் கொண்டார். துர்க்கையையும் அழைத்துக்கொண்டு அசுரன் இருக்கும் இந்தக் காட்டிற்கு வந்தார். காமாட்சியிடமும் அதே பாணியில் போரிட்டான் வச்சிரதந்தன். அவனது தலையை வெட்ட வெட்ட விலங்குகளின் தலையோடு மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருந்தான். ஆத்திரம் கொண்ட காமாட்சியம்மன் துர்காதேவியிடம் அரக்கனின் தலை வெட்டப்பட்டு தரையில் விழுந்ததும் அதைக் காலால் நசுக்கி அழித்துவிடும்படி கூறினார்.

காமாட்சியம்மன் வச்சிரதந்தனின் தலையை வெட்டி வீழ்த்தினார். தரையில் தலை விழுந்ததும், துர்காதேவி காலால் ஆத்திரம் தீர வேகமாக மிதித்தார். தலை மண்ணுக்குள் புதைந்தது. மூளை சிதறி தொலைவில் சென்று விழுந்தது. அரக்கன் தலை அழிக்கப்பட்டதால் மீண்டும் வேறு தலை எடுக்கமுடியாமல் உயிரைவிட்டான்.

அரக்கனின் தலையை துர்காதேவி காலால் மிதித்து நசுக்கிய இடம் தலையாறு என்றும், மூளை சென்று விழுந்த இடம் மூளையாறு என்றும், குலைக்காய் அதாவது ஈரல் விழுந்த இடம் குலையூத்து என்றும், அரக்கனின் உடல் குறுக்காக விழுந்த இடம் குறுக்குமலை என்றும் பெயர் பெற்றன. இந்தப் பெயர்கள் இன்றும் வழக்கத்தில் இருக்கின்றன. தலை விழுந்த இடத்தில் தோன்றிய ஆறு தலையாறு எனவும், மூளை விழுந்த இடத்தில் தோன்றிய ஆறு மூளையாறு எனவும் பெயர்பெற்றன.

இந்த இரண்டு சிற்றாறுகளும் மூங்கில் காடுகளுக்கு நடுவே பாய்ந்து கொண்டிருந்த வேகவதீ என்ற ஆற்றில் சென்று கலந்தன. அரக்கனை கொன்ற காமாட்சியம்மன் கன்னிப்பெண் வடிவம் எடுத்து இந்த நதியின் கரையில் தவமிருந்தாள். அசுரனைக் கொன்ற பாவம் நீங்கவேண்டும் என்பதற்காக துர்காதேவி, சப்த கன்னிகள் மற்றும் தெய்வப் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆயிரத்தெட்டு தங்கக் குடங்களில் தண்ணீர் எடுத்து, அதில் வாசனை திரவியங்களும் மஞ்சளும் கலந்து அபிஷேகம் செய்தனர்.

மஞ்சளாறு

அம்மனுக்கு அபிஷேகம் செய்த மஞ்சள் நீர் வேகவதீ ஆற்றில் கலந்தும் நதிநீர் மஞ்சள் நிறத்தில் மாறியது. அன்றிலிருந்து இந்த நதி மஞ்சளாறு என்று அழைக்கப்பட்டு வருகிறது. அம்மன் தவமிருந்த இடத்தில் சிறிய அளவில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்குத்தான் ஆடிப் பேருக்கு மற்றும் ஆடி அமாவாசை அன்று மக்கள் வழிபட வருகிறார்கள். இந்த இடத்தை அம்மா மச்சு என்று அழைக்கிறார்கள். மூங்கிலணை காமாட்சியம்மனின் முதல் இருப்பிடம் இதுதான். இங்கிருந்து தற்போது அம்மன் கோயில் இருக்கும் இடத்திற்கு காமாட்சியம்மன் சென்றதற்கும் ஒரு கதை இருக்கிறது.

அதற்குமுன் தலையாறு அருவிக்கு போவது பற்றி பார்ப்போம். இங்கிருந்து மூன்று கிமீ தொலைவு காட்டுக்குள் நடந்து சென்றால் தலையாறு அருவியின் அடிப்பாகத்தை பார்த்துவிடலாம். மனதில் ‘தில்’ இருப்பவர்கள் இங்கிருந்து காட்டுக்குள் காலாற நடந்து செல்லலாம். இயற்கையை ரசித்தபடி அடர்ந்த காட்டுக்குள் நடப்பது அருமையான அனுபவம். காட்டுக்குள் வழியறிந்த உள்ளூர் மக்களை துணைக்கு அழைத்துக்கொண்டு செல்வதே நல்லது. இல்லையென்றால் வழி தவற நேரிடலாம்.

இதன் தொடர்ச்சியாக மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *