‘ஈகோயிஸம்’ இந்த வார்த்தையை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். பலரும் ‘என்னுடைய ‘ஈகோ’ பாதிக்கப்பட்டது..!’ என்று சொல்கிறார்கள். இவர்களில் பலரும் ‘ஈகோ’வையும் ஈகோயிஸத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள். ஈகோ வேறு, ஈகோயிஸம் என்பது வேறு. இரண்டும் ஒன்றுபோல் தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
ஈகோயிஸம்
அகம்பாவம், திமிர் என்ற இந்த இரண்டும் ஈகோயிஸத்தின் தமிழ் வார்த்தைகள். யாருக்கும் கட்டுப்படாத அகம்பாவத்தை உளவியலில் திமிர் என்று வகைப்படுத்துகிறார்கள். இதை ஆங்கிலத்தில் ஈகோயிஸம் என்கிறார்கள். ஈகோ இல்லாமல் மனதின் இயக்கம் இருக்காது. மனதின் முக்கிய பகுதியே ஈகோதான். இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லப்போனால் மனம்தான் ஈகோ. அந்த ஈகோவை ஒரு கெட்ட வார்த்தைப்போல் மாற்றிய பெருமை ஆன்மிகத்திற்கும் தத்துவவாதிகளுக்கும் உண்டு.

இந்த ஈகோ தாயின் வயிற்றில் மனிதன் கருவாக உருவாகும்போதே தோன்றிவிடுகிறது. இந்த ஈகோ வளர வளர மனம் என்றாகிறது. புலனுணர்வு, அறிவுத் திறன் இந்த இரண்டும்தான் மனதில் அடிப்படை பணிகள். இந்த உணர்வும் அறிவும் ஒன்று சேர்ந்துதான் மனதை செம்மைப் படுத்துகின்றன. மனம் ஒழுங்காக ஆக மனிதன் ஒழுக்கமானவனாக மாறுகிறான். அதனால் ஈகோ என்பது மனதைக் குறிக்கும்.
ஆனால், ஈகோயிஸம் என்பது முழுக்க முழுக்க ஒரு மனிதன் தன்னைப் பற்றியே சுயநலமாக சிந்திப்பதை குறிக்கும். அது மட்டுமில்லாமல் வரட்டுக் கவுரவம், தலைக் கணம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை போன்ற எல்லா குணங்களும் ஈகோயிஸத்தின் கூட்டாளிகள்தான். இந்த எல்லா குணத்தையும் ஒன்று சேர்த்துதான் தமிழில் அதற்கு ‘திமிர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் உளவியல் அதற்கு ‘அகம்பாவம்’ என்றே பெயர் வைத்திருக்கிறது.
இந்த அகம்பாவத்தை பணக்காரத் திமிர், பதவித் திமிர், ஆண்மைத் திமிர், அழகுத் திமிர், படிப்புத் திமிர், தாய் தந்தையர் பெரிய அந்தஸ்தில் இருந்தால் அவர்கள் மூலம் வரும் அம்மா திமிர், அப்பா திமிர் இப்படி ஏகப்பட்ட திமிர் உள்ளன. வளர்ந்த நாடுகளில் நாட்டுத் திமிர் கூட உண்டு. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு அந்த நாடுகளே ஒரு திமிர் தனத்தை கொடுக்கிறது. ஈகோயிஸத்திற்கு இன்னும் சிலப் பெயர்களும் உண்டு. அகந்தை, மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் ஆகிய எல்லாமே ஈகோயிஸம்தான். இப்படி ஈகோயிஸம் பிடித்த பலர் நம்மிடையே வாழ்கிறார்கள்.
உங்களின் ஈகோ
உங்களுக்குள் ஈகோயிஸம் இருக்கிறாதா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு சொல்லப்போகும் சில நடத்தைகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஈகோயிஸம் கொண்டவர்தான். நீங்கள் திமிர் பிடித்த ஒருவர் மீது என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்களோ அதே மதிப்பீடுதான் மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருப்பார்கள்.
நம்மிடம் நிலவும் சில பழக்க வழக்கங்களை வைத்து நம்மிடம் ஈகோயிஸம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடலாம். அந்தப் பழக்கங்கள் என்னவென்றால், மற்றவர்கள் மட்டுமே நமக்கு வணக்கம் சொல்ல வேண்டும்; நாம் முதலில் சொல்லக்கூடாது என்று நினைப்பது.
அதைப்போலவே தலை நிமிர்த்தி கைகளை பின்னால் கட்டியபடி நடப்பது, ஒருவர் நமக்கு நன்றாக தெரிந்திருந்தும் அவரை கண்டும் காணாததும் போல் நடந்து கொள்வது. பெரும்பாலும் வாய்விட்டு சிரிக்காமல் இருப்பது, ஓரக் கண்ணால் மற்றவர்களை கவனிப்பது, அதிகம் பேசாதிருப்பது, எல்லோரும் தன்னை தேடியே வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பது, தமது இனத்துடன் மட்டுமே பழகுவது, இவை எல்லாமே ஈகோயிஸத்தின் அறிகுறிகள். இவைகள் உங்களுக்கிருந்தால் முதலில் மாற்றிக்கொள்ள முயற்சிப்பது மிக நல்லது. இல்லையென்றால் மற்றவர்கள் மனதை வெல்ல முடியாமலே போகும். மற்றவர்களின் வெறுப்பையே தொடர்ந்து பெறுவீர்கள்.
விதி
நாம் அடைந்துள்ள படிப்பு, பணம், பதவி, அழகு முதலியவை எப்போதும் மாறுதலுக்கு உட்பட்டவைகள் தான் அவற்றால் உண்டாகும் ஈகோயிஸம் காயப்படும் போது மனம் வலிக்கும். ஈகோயிஸம் எந்த அளவுக்கு இருந்ததோ அந்தளவுக்கு அந்த வலி தாங்கமுடியாததாக இருக்கும். அதனால், பதவி கிடைத்து விட்டது என்று நமக்கு கீழ் வேலை செய்பவர்களை அதிகாரம் செய்யக் கூடாது. மாறாக தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். அழகு கூடும்போது ஒரு கட்டத்தில் அது மங்கப் போகிறது என்பதை உணர வேண்டும். பணக்காரர் ஆகும்போது பகட்டாய் நடந்துக் கொள்ளக் கூடாது. பணமும் அந்தஸ்தும் எப்போது வேண்டுமானாலும் குறையலாம் என்பது இயல்பான விதி.
சரி, இப்படியொரு ஈகோயிசம் கொண்டவர் நண்பராக, மேலதிகாரியாக, வாழ்க்கை துணையாக அமைந்துவிட்டால் என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? அவர்களுக்கு அடிமையாகிவிடுவது ஒரு நிலை. அதற்கு தன்மானம் இடம் கொடுக்காது. அப்போது என்ன செய்வது. முடிந்த அளவுக்கு அவர்களை விட்டு ஒதுங்கி இருப்பது நல்லது. அவர்களுக்கு எதிராக செயல்பட்டால் அது அவர்களின் ஈகோயிஸத்தை இன்னும் கூட்டி விபரீத நிலைக்கு கொண்டு செல்லும்.
அதனால் விலகிக்கொள்வதுதான் நல்லது என்று உளவியல் மருத்துவம் சொல்கிறது. ஈகோயிஸம் கொண்டவர் மேலதிகாரியாகவோ நண்பராகவோ இருந்தால் பரவாயில்லை வாழ்க்கைத் துணையாக இருந்தால்.. வேறுவழியில்லை. கொடுமைகளை அனுபவித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் விவாகரத்து பெற்றிட வேண்டும். ஆனால், பலரும் குழந்தைகளுக்காக சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள். நான் கொடுத்துவச்சது அவ்வளவுதான். என்னோட ‘விதி’தான் இப்படியொரு வாழ்க்கை துணை கிடைச்சிருக்கு. என்ன பாவம் செஞ்சேனோ என்று வாழ்பவர்கள்தான் அதிகம். விதி என்ற அந்த இரண்டெழுத்து சொல்தான் ஈகோயிசம் கொண்டவர்களுடன் வாழ்பவர்களுக்கான மருந்து.
அவர்களை திருத்துவது கடினம். அவர்களே உணர்ந்து திருந்தினால்தான் உண்டு. ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. அதனால் அவர்களை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறது உளவியல்.

ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
Good information really
நன்றி
great sir …Now clear .. Thank you
நன்றி கண்ணாயிரம்!
நன்றி
இதை நான் பகிரலாமா??
தங்களின் கருத்துக்கு நன்றி.
இந்தப் பதிவை நீங்கள் விரும்பும் சமூக ஊடகங்களில் பகிரலாம் அதற்கான ஷேர் பட்டன் கட்டுரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்தாலே தானாகவே உங்களின் சமூக ஊடகங்களில் பகிர்ந்து விடும்.