அம்மாவுக்கு ஒரு கடிதம்/Aravind kumar

ஹாஸ்டல் மாணவி அம்மாவுக்கு எழுதிய வேதனைக் கடிதம்

அன்புள்ள அம்மா, நான் இங்கு நலம்? நீங்கள் அப்பா நலமா? நான் இங்கு ஹாஸ்டலில் நன்றாக படிக்கிறேன். சென்ற மாதத் தேர்வில் நிறைய மார்க் வாங்கினேன். எங்க ‘கனகா மிஸ்’ கூட என்னை ரொம்ப பாராட்டினார். இன்னும் நன்றாக படித்து உனக்கும் அப்பாவுக்கும் நல்ல பெயரை வாங்கித் தருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் அம்மா.. என் மனசுக்குள் கிடந்து தவிக்கும் சில நீண்டநாள் உறுத்தல்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கடிதம். தயவுசெய்து இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அம்மா! எனது கனவுகள் நிறைந்த குழந்தைப் பருவத்திலேயே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட என் சூம்பிப்போன கால்களும் அதனால் துவண்டுபோன மனமும் எனக்குப் பழக்கப்பட்ட உணர்வு தான் என்றாலும், ஹாஸ்டல் வாழ்க்கையில் அது சற்று பெரிதாகத் தெரிகிறது ஏனம்மா..! சக மாணவர்கள் வேடிக்கைக்காக ‘ஏய்.. நொண்டி..!’ என உச்சரிக்கும் ரணம் நிறைந்த சொற்கள் அவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட எனக்கு..? என்னை போல சிலருக்கு..?!

அம்மா

கழுதையின் வாலில் வாணவெடியை கட்டி வைத்து விளையாடுபவர்களுக்கு வேடிக்கை முதன்மையாக தெரியுமே தவிர, கழுதையின் வேதனை தெரியுமா.. அம்மா! அம்மா.. பொதுவாக எது இல்லையோ அது தான் பெரிதாகத் தெரியும் என்று சொல்வார்கள். அது மனித இயல்பு என்று கூட சொல்வார்கள், இருந்தாலும் அம்மா.. சூம்பிய கால்களைக் கொண்டு தான் நடனமாட ஆசைப்படலாமா? ஆனாலும் அது போல ஆசை இல்லா விட்டாலும், என் குழந்தைப் பருவத்திற்கே உரிய ஆசை.. பூக்கள் நிறைந்த எங்கள் ஹாஸ்டல் பூங்காவில் எல்லோரையும் போல.. துள்ளிக் குதித்து ஓடி வரும் பந்தை ஓங்கி அடித்து உதைக்க வேண்டும்.. அரை பெடலில் சைக்கிளில் ஏறி சவாரி செய்ய வேண்டும். என் தேசத்து ராணுவ வீரனைப் போல ‘வந்தே மாதரம்’ முழங்கி கம்பீரமாக கை வீசி நடக்க வேண்டும்.. என்ற எனது நியாயமான இந்த ஆசை தவறாம்மா..?

pixabay.com/Enrique Meseguer
அம்மாவுக்கு ஒரு கடிதம் படம்:Enrique Meseguer

அம்மா.. உனக்கு ஒன்று ஞாபகம் இருக்கிறதா? உன் வயிற்றிலிருந்து பிறக்கும் போது நல்ல கால்களுடன் தான் இந்த பூமியில் ஜனித்திருக்கிறேன். அந்த மழலை பேசிய சிறுவயதில் பஞ்சு மெத்தை போன்ற என் பிஞ்சுக் கால்களால் அப்பாவின் நெஞ்சில் மிதித்து சந்தோஷித்திருக்கிறேன். வெள்ளிக் கொலுசை காலில் கட்டி.. வீதியில் விளையாடியிருக்கிறேன்.. எல்லாம்.. எல்லாம்.. நீ சொன்னதுதான்.. ஞாபகம்.. அந்த துள்ளிக்குதித்த கால்கள் எங்கே போனது? இனி அந்த கால்கள் எனக்கு கிடைக்குமா..?

ஞாபகச்சின்னங்கள்

அம்மா வாழ்க்கையில் ஞாபகம் என்பதும் மறதி என்பதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள்தான். ஆனால், சில சாதாரண மறதிகள்தான் சிலர் வாழ்க்கையின் ஞாபகச்சின்னங்கள் ஆகிவிடுகின்றன. உன் மனம் கூட அப்படித் தானே அம்மா..! என்னை உன் உயிர் போல நேசித்தாய் மறப்பேனா..! ஆனால், என் உயிரை நேசித்த நீ.. என் உடலின் ஒரு பாகத்தை கால்களை மறந்துவிட்டாயே ஏனம்மா..? அந்த சின்ன வயசில்.. என்றோ ஒருநாள் எனக்கு போலியோ சொட்டு மருந்து தர மறந்ததற்கு பரிசு என் கால்களா அம்மா..? நீ தெரிந்து செய்த தவறல்ல அது..! எனக்கு தெரியும். நான், சொட்டு மருந்து கொடுக்காததன் விளைவால் பாதிக்கப்பட்ட போது.. அதை டாக்டர் சொன்னபோது.. என்னை விட நீயல்லவா.. துடித்து போனாய் கடவுளே.. என் கால்களை எடுத்துக்கொண்டு என் செல்ல மகளே நடக்கச் செய்ய மாட்டாயா..? என்று கதறியவள் நீதானே! இப்போது கூட, எனக்காக.. நான் உள்ளுக்குள் அழுவதைவிட நீதானே உணர்வாய் அழுது கொண்டிருக்கிறாய்..!

அம்மா.. உன் உயிர் மகள் உன்னை குறை சொல்ல இந்த கடிதம் எழுதவில்லை ஆனால், என்னைப் போல எத்தனை குழந்தைகள், உன்னைப் போன்ற எத்தனை தாய்கள் தங்களின் ஞாபக மறதியால்.. ஏதோ காரணத்தால் சொட்டுமருந்து கொடுக்காத விளைவால் உடலில் குறைகளைக் கொண்டு செத்து செத்து வாழ்கிற நரக வாழ்க்கை.. ஒரு சின்ன ஞாபக மறதியால் வாழ்க்கை முழுவதும் இருட்டு என்னும் ஊனம் வேண்டுமா அம்மா..?

நெஞ்சுக்குள் எழுதி

அம்மா.. உன்னைப் போன்ற தாய்களுக்கு எத்தனை வேதனை? இது தேவையா..? அம்மா.. இந்திய தாய்மார்களுக்கும் உன் மூலமாய் உன் அன்பு மகளின் சின்ன வேண்டுகோள். வரும் காலங்களில் என் இந்தியத் தாயின் மடியில் பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் எனும் துயரை அனுபவிக்கக்கூடாது. இயற்கையாக சில நேரம் ஊனமாய்ப் பிறக்கலாம். இது தவிர்க்க முடியாது. ஆனால், எனது வருங்கால குழந்தை சகோதரர்களுக்கு போலியோ சொட்டு மருந்து மட்டுமல்ல, மற்ற தடுப்பூசிகள் தடுப்பு மருந்துகள் எந்த வயதில், எந்த மாதத்தில், எந்த நாளில், என்ன ஊசி என்ன மருந்து கொடுக்கவேண்டும் என்ற விவரத்தை அறிந்து நெஞ்சுக்குள் எழுதி குறித்து வைத்துக் கொண்டு, அதை சரியாக செய்ய வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.

வலியின் உணர்வு வழிவந்தவர்களுக்கே தெரியும். வலியை அனுபவித்து கொண்டிருக்கும் உன் மகள் இதை எழுதுவதில் தப்பில்லையே..? ஆனாலும்.. அம்மா, உடலில் ஊனம் ஒரு புறம் இருந்தாலும்.. ஒன்று உன் மிருதுவான, தூய்மையான, அன்பினால் வருங்காலத்தில் ஊனம் எனும் தடைக்கல்லை உடைத்தெறிந்து அகற்றி, நம்பிக்கையின் ஒளியை ஏந்திச் ஊர் போற்றும் படி உன் மகள் சாதிப்பாள் அம்மா..!

அன்புடன்..
உன் அன்பு மகள்
ஸ்நேகா

கதையின் விழிப்புணர்வு

ஊனம் என்பது ஒரு தடையல்ல. மனித வாழ்வில் நோய் நொடியற்று இருக்க, பாதுகாப்பு கவசமாய் இருப்பவை தடுப்பூசிகளும் தடுப்பு மருந்துகளுமே, ஒவ்வொரு பெற்றோரும் பிறந்தநாள், திருமணநாள் போல, தடுப்பூசி, போலியோ, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய வயது மற்றும் நாட்களை நெஞ்சில் மட்டுமல்லாமல், நினைவு நூல்குறிப்பிலும் குறித்து வைத்துக் கொள்ளலாமே..

ஆசிரியர் பற்றி…

எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்பட இயக்குனர் என்று பல தளங்களில் இயங்குபவர். குழந்தைகள் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய ‘இனிய மாணவனே இனி நீதான் நம்பர் 1’ என்ற புத்தகம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது