விக்கிரமன் மரணத்தில் விளையாடிய விதி

எழுத்தாளர் விக்கிரமன் மரணத்தில் விளையாடிய விதி

எழுத்தாளர் விக்கிரமன் மரணத்தில் விளையாடிய விதி

“இன்னுமொரு முறைசொல்வேன் பேதை நெஞ்சே,

எதற்குமினி யுளைவதிலே பயனொன் றில்லை;

முன்னர் நமதிச்சையினாற் பிறந்தோ மில்லை;

முதலிறுதி யிடை நமது வசத்தி லில்லை;”

-பாரதியார்

விக்கிரமனிடம் விளையாடிய விதி

தமிழ் எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழ் ஆசிரியருமான விக்கிரமன், தமது எண்பத்தெட்டாவது வயதில் இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு திசம்பர்த் திங்கள் முதல்நாள் இயற்கை எய்தினார்.

தருமமிகு சென்னையில் வரலாறு காணாத மழை-வெள்ளம் காரணமாக அவருடைய பூதவுடலை எரியூட்ட மயானம் கிடைக்காமல் நான்கு நாள்களாக அவதிப்பட்டனர் குடும்பத்தினர்.

“துயரத்தினும் துயரம் நிறைந்த இந்த நிகழ்வு குறித்து விக்கிரமனின் மகன் கண்ணன், ‘இந்து’ தமிழ் நாளிதழிடம் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது;

பலர் “01-12-2015 பகலில் என் தந்தை விக்கிரமன் இறந்த செய்தியை உற்றார்-உறவினர்களுக்குக் கைப்பேசி மூலம் தெரியப் படுத்தினேன். வெளியே மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. இறப்புச் செய்தியை அறிந்தும்கூட மழை-வெள்ளம் காரணமாய் வரமுடியவில்லை.

என்னுடைய சகோதரரும் மூன்று சகோதரிகளும் வரும்வரையில் உடலைப் பாதுகாக்கக் குளிர்பதனப் பெட்டிக்காக (பிரீசர் பாக்ஸ்) நாங்கள் அலையாத இடமில்லை. அப்படியே கிடைத்தாலும் மின்சாரம் இல்லாததால் எந்தப் பயனும் இல்லை. பனிக்கட்டியும் (ஐஸ் பார்) எங்கும் கிடைக்கவில்லை.

முயற்சியும், நம்பிக்கையும் வீணாயின

ஏரி உடைந்து வெளியேறிய தண்ணீர் காரணமாக எங்கள் வீடு இருக்கும் மாம்பலம் பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. கழுத்தளவு வெள்ளத்தில் நீந்திச் சென்று எப்படியாவது உடலை இடுகாட்டுக்குக் கொண்டு போக முயற்சி செய்தோம். எங்கள் முயற்சியும், நம்பிக்கையும் வீணாயின.

திருவான்மியூர், கண்ணம்மாபேட்டை, கிருட்டிணாம்பேட்டை இடுகாடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் புதைக்கவும் வழியில்லை. மரபுப்படி எரியூட்ட விறகும் கிடைக்கவில்லை. மின்மயானத்தில் எரியூட்டவோ மின்சாரம் இல்லை. நாங்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளானோம்.

இந்த இக்கட்டான சூழலில் ம.நடராசன், தொழிலதிபர் மாம்பலம் சந்திரசேகர் ஆகியோர் எங்கள் துயருக்குத் தோள் கொடுத்தனர். மயானம் கிடைக்கும்வரை உடலைப் படகு மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பாதுகாக்கச் சென்னையில் இருக்கும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை எல்லாம் அணுகினர். “இறந்து இரண்டு நாள்கள் ஆன உடலை மற்ற உடல்களுடன் வைக்க முடியாது” என்று கூறி எல்லா மருத்துவமனைகளும் கைவிரித்துவிட்டன.

விக்கிரமனிடம் விளையாடிய விதி

இதற்கிடையில் 15577 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் உதவி கிடைக்கும் என்று யாரோ சொல்ல, தொடர்பு கொண்டோம். அந்த எண்ணில் இருந்தவர்கள் “உங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு கடிதம் வாங்கி வந்து விடுங்கள். உடலை நாங்கள் பாதுகாப்பில் வைக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை, உடல்கூறாய்வு (போஸ்ட் மார்ட்டம்) செய்துதான் வைப்போம்” என்றார்கள். எங்களுக்குப் பேரதிர்ச்சி.

சகித்துத்தான் ஆக வேண்டும்

மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, அந்த நிபந்தனைக்குச் சம்மதித்து எங்கள் பகுதியில் இருந்த காவல் நிலையத்துக்குச் சென்று கடிதம் கேட்டோம். அவர்கள் தர மறுத்துவிட்டனர். அதன்பிறகு திருவல்லிக்கேணியில் இருந்த ‘பென் அண்ட் கோ’ என்ற தனியார் அமைப்புக்குக் கொண்டு போக முயற்சி செய்தோம். அதுவும் தோல்வி அடைந்தது.

மிகுந்த துன்பத்துக்குப் பிறகு மூன்றாம் தேதி இரவு (மூன்றாம்நாள்) இராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஓர் அவசர ஊர்தி மூலம் தந்தையின் (விக்கிரமனின்) உடலைக் கொண்டு சென்றோம். நாங்கள் கொண்டு போன வாகனத்திலேயே ‘எம்பார்ம்’ செய்து உடலைப் பாதுகாக்க முன்வந்தார்கள்.

நான்காம் தேதி பகலில் இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து நேரடியாய்த் திருவல்லிக்கேணியில் இருக்கும் கிருட்டிணாம்பேட்டை சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று இயற்கை எரிவாயு (பயோகேஸ்) மூலம் என் தந்தை விக்கிரமனின் பூத உடலை எரியூட்டினோம்;” என்றார்.

ஐம்பத்து நான்கு ஆண்டுகள் அமுதசுரபி இதழின் ஆசிரியராய் இருந்த விக்கிரமன், பத்தொன்பது ஆண்டுகள் ‘இலக்கிய பீடம்’ என்னும் இதழை நடத்தி வந்தார். ‘நந்திபுரத்து நாயகி,’ ‘வந்தியத்தேவன் வாள்’ ‘ராஜராஜன் சபதம்’ உள்பட முப்பத்து மூன்று வரலாற்று நாவல்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கதைகளும் எழுதிய இவர் முப்பது ஆண்டுகளாக அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத் தலைவராயும் இருந்து வந்தார்.

பலருடைய வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்ட மழை-வெள்ளம், புகழ்பெற்ற ஓர் எழுத்தாளரின் இறுதிப் பயணத்தையும் விட்டுவைக்க வில்லை.

“சிலநேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்” என்பார் வேதாத்திரி மகரிஷி. இதற்கு ஓர் உதாரணம் தான் விக்கிரமனின் மரணம்.

“அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும்”

குறள் (625)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *