வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் ஒரே நாளில் முடிந்து விடுகிறது. தன திரயோதசி, தீபாவளி, அமாவாசை நாட்களில் லட்சுமி குபேர பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதி இலட்சுமி குபேர பூஜை. தீபாவளி அன்று வட இந்தியர்கள் புதுக்கணக்கு எழுதுவார்கள். தந்தேஸ் எனப்படும் தனத்திரயோதசி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும். அக்ஷய திரிதியை நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இதே போல ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் திரயோதசி தனத்திரயோதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் பொருட்களும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தீபாவளித் திருநாளின் முதல் நாள் தன்வந்திரி திரயோதசியாக கொண்டாடப்படுகிறது. ‘தந்தேரஸ்’ என வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர். அன்று இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைப்பது எமபயம் தீர்ப்பதாக ஐதீகம். எனவே அந்த விளக்கு ‘எமதீபம்’ என்று அழைக்கப்படுகிறது.
செல்வம் பெருகும்
வீட்டில் வரவு செலவு கணக்கை முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். எப்போதும் கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். ஆற்றில் போட்டாலும் அளந்து தான் போடவேண்டும் என்பது நம்முடைய முன்னோர் வாக்கு. மகிழ்ச்சியுடன் சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும்.
தனதிரயோதசி நாளில் தங்கம், வெள்ளி, வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள், ஆடைகள் வாங்கலாம். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும். பங்குச்சந்தைகளிலும் முதலீடுகள் செய்யலாம். பாற்கடலில் இருந்து அமிர்தம் வேண்டி கடைந்த போது அனைத்து செல்வங்களுடன் லட்சுமி தேவி அவதரித்தார்.
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று சொல்வது உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார்.
லட்சுமி குபேரன்
வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிப்பவர் குபேரன். எனவே தான் குபேரன், லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.
குபேரன் அருளாட்சி நடத்த அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான்.
குபேரனது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.
குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்றார். லட்சுமி தேவியை வணங்கி அவரிடம் இருந்து யந்திரத்தை பெற்று அந்த யந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்து இழந்த செல்வத்தை மீட்டான்.
வடக்கு திசை
சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப் பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார். குபேரனை வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள்.
பொதுவாக வெள்ளிக்கிழமைகளிலும், பூச நட்சத்திரம் வரும் நாளிலும் லட்சுமி குபேர பூஜை செய்யலாம். வளர்பிறை திரிதியை, அட்சய திருதியை நாளிலும் குபேர பூஜை செய்ய ஏற்ற நாள். அதே போல தன திரயோதசி எனப்படும் தந்தேரஸ் நாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் கணக்கின்றி செல்வம் பெருகும்.
தனத்திரயோதசி நாளில் கஸ்தூரி மஞ்சள் வைத்து பூஜை செய்து வழிபட்டு தீபாவளி நாளில் மகாலட்சுமி பூஜை செய்து அந்த மஞ்சளில் நமது பணம் வைத்து புழங்கும் பீரோவில் வைக்க செல்வம் பெருகும் என்பது ஐதீகம்..
ஒரு கலசம் வெள்ளி அல்லது செம்பு சொம்பு அல்லது குடம் எடுத்து அதன் உள்ளே பன்னீர் , ஏலத்தூள், லவங்கம் பட்டை, சந்தனம் அரகஜா, அகில் புனுகு ஜவ்வாது என எவ்வளவு வாசனை திரவியங்கள் என்ன முடியுமோ அத்தனையும் சேர்த்து தண்ணீர் நிரப்பி அதற்கு மேல் தேங்காய் மஞ்சள் பூசி எட்டு மாவிலைகளோடு வைத்து இந்த கலசத்தை ஒரு முக்காலி மேல் அரிசி அல்லது நெல் பரப்பி வைக்கவும். கலசத்துக்கு முகம் வைத்து அலங்கரித்து மல்லிகை மாலை தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.பாதுகாப்பான இடமெனில் தங்க நகைகளும் போடலாம்.

குபேர சக்கரம்:
இந்த எண்களை வரைந்து சுற்றி பச்சரிசி மாவு கொண்டு கோலம் போல் போடவேண்டும். ஒரு கட்டத்தில் உள்ள எண்கள் அளவு காசுகள் வைக்கலாம். குபேரனுக்கு பிடித்த எண் 5.
எனவே 5 ரூபாய் நாணயங்கள் மொத்தம் 216 காசு தேவைப்படும். சக்கரத்தை உதிரி பூக்களால் அலங்கரிக்கவும். லட்சுமி குபேரன் படம் அல்லது சிலை வைக்கலாம். சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வலம்புரி சங்கு கல் உப்பு ஜாடி என லட்சுமி அம்சங்களை வைத்து வழிபடுவது அவசியம்.
லட்சுமிக்கு 5 வகை கனிகள் வைக்க வேண்டும். செவ்வாழை , பெருநெல்லி, மாதுளை அவசியம் இருக்க வேண்டும். பூஜையில் மல்லி, தாமரை இருப்பதோடு வாழைப்பூ அவசியம் வைக்க வேண்டும். காரணம் இந்த செல்வம் வாழையடி வாழையாக தங்க வேண்டும் என்பதற்காகவே, வாழைப்பூ அவசியம்.
குபேர மந்திரம்
குபேரனுக்கு உலர்திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, ரவா கேசரி, பாதாம் பால் என வசதிக்கு ஏற்ப நைவேத்தியம் செய்ய வேண்டும். மகாலட்சுமிக்கு 108 போற்றி சொல்லி வழிபட்டு குபேர மந்திரம், குபேர முத்திரை வைத்து துதிக்க வேண்டும். நாணயங்களை குபேர லோகத்தில் உள்ள குபேரனுக்கு கேட்கும் வகையில் தட்டில் ஒவ்வொன்றாக எடுத்து போட்டு வழிபடலாம். தூப தீபம் காட்டி பூஜை நிறைவு செய்து பால் , கேசரி போன்ற பிரசாதங்களை விநியோகம் செய்யலாம்
அடுத்த நாள் காலை மறு பூசை செய்து மகாலட்சுமி மந்திரம் 108 சொல்லி பூஜை செய்து சிறிது நேரம் விட்டு கலசம் எடுத்து உள்ளே உள்ள தீர்த்தத்தை வீடு முழுக்க தெளித்து சிறு பாட்டில்களில் கசிவு இல்லாமல் அடைத்து பணப்பெட்டியில் பத்திரப்படுத்தவும்.
இப்படி செய்தால் குறையாத செல்வம் எப்போதும் உங்களிடம் தங்கி இருக்கும். செய்து பாருங்களேன்..!

ஆசிரியர் பற்றி…
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர், மீனாட்சி மைந்தன், திருவருட்செல்வர், நகைச்சுவை நாவரசு, எழுத்தாளர், கவிஞர், ஆன்மிக சொற்பொழிவாளர், குடமுழுக்கு திருவிழாக்களின் நேர்முக வருணனையாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், 5000 ஆயிரம் பட்டிமன்றங்களுக்கு மேல் நடுவராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். வெள்ளி விழா கண்ட மதுரை இலக்கியப்பேரவையின் தலைவர்.