இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் புனிதத் தலங்களாக மதித்துப் போற்றும் இடங்கள் காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகியவைகள்தான். காசி நகர் புனிதமிக்க நகரமாக இருந்த போதிலும் அதன் தெருக்கள் எல்லாம் மிக குறுகலாகவே உள்ளன. பெரும்பாலான தெருக்கள் 5 அடிக்கும் குறைவான அகலத்தில் அமைந்துள்ளன. காசி நகரம் விசித்திரங்கள் நிறைந்த நகரமாகும். இங்கிருக்கும் காகங்கள் கரைவதில்லை, நாய்கள் குரைப்பதில்லை, மல்லிகை மணப்பதில்லை, மாடுகள் முட்டுவதில்லை இந்த உண்மை அங்கு சென்ற பின்னர் உணர முடிந்தது. ஏன் இப்படி என்பதை இப்போது பார்ப்போம்..!
நாம் கங்கை நதி என்றாலே இரண்டு பக்கமும் வெள்ளம் புரண்டு ஓடும் ஒரு ஜீவநதி என நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், காசி சென்று பார்த்தால் அந்த மாயை விலகி ஓடி விடும். அங்கு கங்கையைப் பார்த்தபோது அது வறண்டு நீர் இல்லாமல் இருந்தது. அங்குள்ள மக்களிடம் விசாரித்ததில் கங்கையாற்றில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் வருமாம். அதாவது ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுமாம். மற்ற நாட்களில் கங்கையும் நம் வைகை, காவிரி போல வறண்டுதான் இருக்குமாம்.
நாங்கள் சென்றிருந்த சமயம் கங்கை நதியின் கரையோரம் மட்டுமே நீர் காணப்பட்டது. ஒரே ஆறுதலான விஷயம், கங்கை ஆற்றில் மணல் அள்ளப்படுவதில்லை. எனவே, மணல் குன்று போல் குவிந்து கிடக்கிறது. நம் ஊராக இருந்தால் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு மணலை அள்ளி, அதை காசாக்கி, ஆற்றையும் பள்ளமும் மேடுமாக மாற்றியிருப்பார்கள். நல்ல வேளை நம் தமிழ்நாட்டில் கங்கை பாயவில்லை.
காசி
காசி என்பது ஒரு மாநகரம் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை சுற்றுலாவோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இங்கு வரும் யாத்திரீகர்களை நம்பியே அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. அதனால் மக்கள் புரோகிதம் செய்தும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையானவற்றை கொடுத்தும் பணம் ஈட்டுகிறார்கள். சுற்றுலாப்பயணி ஒருவர் தனக்கு பனாரஸ் சேலைகள் வேண்டுமென ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டால், அந்த ஓட்டுநர் ஒரு கடையை காட்டுகிறார். அது உண்மையான பனாரஸ் சேலைகள் உற்பத்தி செய்யும் ஒரிஜினல் நிறுவனமாகவே இருக்கிறது.
இப்படி ஓட்டுனர்கள் அழைத்துச் செல்லும் பயணிகள் எவ்வளவு தொகைக்கு கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களோ அதற்கு 10 சதவீதம் கமிஷன் கொடுத்துவிடுகிறார்கள் கடைக்காரர்கள். அந்த விஷயத்தை பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுனர்கள் மறைக்காமல் சொல்லிவிடுகிறார்கள். இப்படி கார் ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநர் என யாராக இருந்தாலும் இந்த கமிஷன் என்பது உறுதியாகி விட்டது. எனவே எங்கும் எதிலும் புரோக்கர் மயம் தான்.
காசி விஸ்வநாதர்
விஸ்வநாதர், அன்னபூரணி தேவி ஆலயங்களுக்கு செல்ல வேண்டுமென்றால், மிக குறுகலான 5 அடிக்கும் குறைவான அகலம் உள்ள சந்துக்கள்தான் உள்ளன. மேலும் கோவிலுக்குச் செல்லும் வழி எங்கும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக அதிகமான அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஸ்வநாதர் சிலைக்கு அருகே சுமார் இருபதடி தொலைவில் பார்க்கும் இடமெல்லாம் ஒரே போலீஸ் மயமாகத்தான் உள்ளது. இப்படி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் இருப்பது மிக மிகச் சிறிய அளவில். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் கோயிலினுள் இருக்கும் காசி விஸ்வநாதர் சிலை; மிகச்சிறிய சிவலிங்கம் போன்று காணப்படுகிறது. இதை வைத்துத்தான் நம் முன்னோர்கள் மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்று சொன்னார்கள் போலும்!

இதேபோல்தான் காசி விசாலாட்சி ஆலயம் போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பத்திரமாக உள்ளது. அதுவும் சிறிய சந்துகள் வழியே செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும் லட்சக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் ஆலயம் வந்து செல்கின்றனர்.
பனாரஸ் பட்டு
காசி நகரை பொறுத்தமட்டில் கோவில்கள், பனாரஸ் பட்டு சேலைகள் மற்றும் கங்கை நதி மிகவும் பிரசித்தம். மேலும் இந்நகரின் சிறப்பு என சிலவற்றைச் சொல்லலாம். இந்த நகரில் மல்லிகை பூவுக்கு மணம் இருக்காது. இந்த நகரத்தில் நாய்கள் குரைக்காது, கடிக்காது. இந்த நகரில் மாடுகள் யாரையும் முட்டுவதில்லை. காகம் கரைவதில்லை.
உண்மையில் இங்கிருக்கும் மல்லிகைப் பூவை முகர்ந்து பார்த்தால் மணமே இருப்பதில்லை. காசி விஸ்வநாதர் ஆலயம், விசாலாட்சி ஆலயம் எங்கு சென்றாலும் மிக குறுகிய சந்துக்குள் வழியே செல்ல வேண்டியுள்ளது. அந்த வழியெங்கும் நாய்கள் சௌகரியமாக படுத்துக் கிடக்கின்றன. யாத்திரிகர்கள் செல்லும் அவசரத்தில் நாயின் வாலை மிதித்து விட்டாலோ, துரத்தினாலோ அந்த நாய்கள் நம்மைப் பார்த்து குரைப்பதும் இல்லை. கடிப்பதுமில்லை.
இந்தப் பதிவை காணொளியாகவும் காணலாம்..
அடுத்து, நகரம் முழுவதும் பசு மாடுகளும் காளை மாடுகளும் சாலையிலும் சந்துக்களிலும் நிறைந்து காணப்படுகின்றன. அதன் அருகில் சென்றாலோ அல்லது அதை நாம் அடித்து நகரச் செய்தாலோ அவைகள் தனது எதிர்ப்பை எந்தவிதத்திலும் காட்டுவதில்லை.
நான்காவது நாம் ஏற்க்கனவே சொன்னதுபோல் இங்கிருக்கும் காகங்கள் கரைவதில்லை. இதெல்லாம் இங்கு குடிகொண்டுள்ள விசாலாட்சியின் சக்தி என்கிறார்கள். முற்காலத்தில் இங்கு வாழ்ந்த சித்தர்களின் சக்தியால்தான் இப்படி நிகழ்ந்தது என்றும் சொல்கிறார்கள். சக்தி எதுவாயினும் நம்மைப் பொறுத்த மட்டில் இவையெல்லாம் ஒரு ஆச்சரியமான நிகழ்வுகளாகத்தான் இருக்கின்றன.
காலபைரவர்
காசி மாநகரத்தின் ஆலயங்களில் மேலும் சிறப்புற்றது காலபைரவர் ஆலயம். இந்த ஆலயம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவாமி சிலையும் மிகச்சிறிய அளவிலேயே உள்ளது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாங்கள் சென்றிருந்த சமயம் அங்கு நின்றிருந்த இளைஞர்கள் தங்கள் கையில் இருந்த பெட்டியை திறந்து ஒரு மது பாட்டிலை எடுத்து பூசாரியிடம் கொடுத்தார்கள். பாட்டில் மூடியைத் திறந்து சுவாமி மீது மதுவை ஊற்றி அபிஷேகம் செய்தார் அந்த பூசாரி. எங்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பாண்டி, சுடலை மாடன் போன்ற கடவுளுக்கு ஏதேனும் ஒரு வகையில் படையலுடன் சேர்த்து மதுவை வைப்பது நம் கிராமிய நடைமுறை. ஆனால் இங்கு ஆண்டவனுக்கு அபிஷேகம் விஸ்கியில் நடக்கிறது.
காலபைரவருக்கு எதிரே பூசாரி ஒருவர் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் செல்கிறார்கள். கீழே குனிந்து வணங்குகிறார்கள். குனிந்து வணங்கியப் பின் அந்த பூசாரி குனிந்தவர் முதுகில் ஓங்கிக் குத்துகிறார். குத்து வாங்கியவர் உடனே தன்னிடம் உள்ள 50 அல்லது 100 ரூபாயை அவரிடமுள்ள தாம்பூல தட்டில் போட்டுவிட்டு செல்கிறார்கள். ஆச்சரியம்தான் ஆனால் உண்மை. இப்படி பல ஆச்சரியங்கள் காசி மாநகரில் இருக்கின்றன.

ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஏன் இப்படி என்பதை இப்போது பார்ப்போம்..!/சொல்ல வில்லையே
அங்கு இருக்கும் கால பைரவர் சன்னதியில்பைரவருக்கு எதிரே பூசாரி ஒருவர் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் செல்கிறார்கள். கீழே குனிந்து வணங்குகிறார்கள். குனிந்து வணங்கியப் பின் அந்த பூசாரி குனிந்தவர் முதுகில் ஓங்கிக் குத்துகிறார். /நாங்கள்போயிருந்தபோதுஎனக்கு முன் சென்ற என் தமையனார் முதுகில் குத்து வாங்கினார் என்முறைவந்தபோது என்னைக்குத்துவதை நான் அனுமதிக்கமாட்டேன் எனக் கூறி காலபைரவரைவணங்கிவந்தேன்
காசி நகரில் புடவைக்கடை ஒன்றுக்கு சென்றுவந்தோம் அக்கடைக்காரர் நான்வசிக்கும் பெங்களூர்காரர்
அதை பற்றிய விவரம் தனிப் பதிவாக வரவுள்ளது அய்யா!
தங்கள் கருத்துக்கு நன்றி!
அன்பு நண்பர் செந்தில்குமார் அவர்களுக்கு நேச வணக்கம்!
வலைப்பூ மூலமாகவே சக்கைப் போடு போட்டு வந்த தாங்கள் தற்பொழுது தனித்தளமும் தொடங்க முன்வந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி! தளம் தொடங்கக் காரணம் என்ன என்பதை அடியில் குறிப்பிட்டிருந்தீர்கள். தங்கள் தமிழ்ப் பற்று அதில் தெரிகிறது. மிகவும் அருமை!
கட்டுரை படித்தேன். காசி பற்றி இதற்கு முன்பும் ஓரளவு படித்திருக்கிறேன். ஆனால், இப்படி ஓர் அதிசயம் அங்கு இருப்பதை – அங்குள்ள நாய்கள் குரைக்காது, மாடுகள் முட்டாது, காகங்கள் கரையாது, மல்லிகை மணக்காது என்பதை – இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. மிகவும் வியப்பாக உள்ளது! இதற்கான அறிவியலார்ந்த விளக்கம் என்ன என்பதை அறிய ஆவல். அரிய தகவலைக் கொண்ட இக்கட்டுரைக்கு நன்றி!
அதே நேரம், கட்டுரையில் நிறைய எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சந்துகள் எனும் சொல் கட்டுரை முழுக்கவும் சத்துக்கள் என்றே பதிவாகி உள்ளது. மணம் என்பதற்கு மாறாக மனம் என்றும் பல இடங்களில் உள்ளது. பொதுவாக உங்கள் எழுத்தில் நான் எழுத்துப்பிழைகள் அவ்வளவாய்க் கண்டதாய் நினைவில்லை. இது மட்டும் ஏன் இப்படி? இது விதயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகிறேன்! தளத்தின் வடிவமைப்பு மிக அழகாக உள்ளது!
வாருங்கள் நண்பரே!
தங்கள் வருகைக்கும் முழுமையான கருத்துக்கும் முதல் நன்றி. கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதால் இப்படி பிழை ஏற்பட்டுவிடுகிறது. மேலும் மனிதர்களில் 35 சதவீதம் பேர் ஒரு வார்த்தையின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் பார்த்து, இடையில் உள்ள எழுத்துக்களை சரியாக பார்க்காமலே அந்த வார்த்தையை பிழையில்லாமல் படித்து விடுவார்களாம். அப்படி ஒரு குறை எனக்கும் இருக்கிறது போலும். நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகுதான் இவ்வளவு எழுத்துப் பிழைகள் இருப்பதை கண்டேன்.
அவற்றை திருத்தி விடுகிறேன் நண்பரே! பிழையை சுட்டிக்காட்டியமைக்கு மீண்டும் நன்றி.
தொடர்ந்து கருத்திடுங்கள்.
ஏற்றுக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே!
மிக்க நன்றி!