Categories: வரலாறு

கிளியோபாட்ரா-43 கிளியோபாட்ரா பற்றி தவறான பரப்புரை

Published by
‘நவரசு’ நெல்லை விவேகநந்தா
Share

கிளியோபாட்ரா-43 கிளியோபாட்ரா பற்றி தவறான பரப்புரை

தனது ஒன்றுவிட்ட சகோதரி ஆக்டேவியாவைப் பிரிந்த ஆண்டனியை மீண்டும் அவளுடன் சேர்த்து வைக்கக் காய்களை நகர்த்தினான் ஆக்டேவியன். அதுபற்றி ஒற்றர்களிடமும் கூறி ஆண்டனிக்குத் தகவல் அனுப்பியவன், ஆண்டனியை ரோமிற்கே வருமாறும் கேட்டுக் கொண்டான்.

ஆக்டேவியன் போட்ட இந்தக் கணக்கின் பின்னணியில் கிளியோபாட்ராவின் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற பெரும் திட்டமும் இருந்தது.

ஒருவேளை, ஆக்டேவியனின் விருப்பப்படி ஆண்டனி கிளியோபாட்ராவை விட்டு மீண்டும் ஆக்டேவியாவுடன் இணைந்திருந்தால் ரோமாபுரியின் இன்றைய வரலாறு அப்படியே தலைகீழாக மாறியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம். ஆனால், கிளியோபாட்ராவை விட்டுப்பிரிய ஆண்டனிக்கு மனசு வரவில்லை. இதனால்தான் என்னவோ, அவனது அழிவும் நெருங்க ஆரம்பித்தது.

அதேநேரம், ஆண்டனிக்கு ஆக்டேவியன் தூது அனுப்பிய விஷயம் கிளியோபாட்ராவுக்கும் தெரிந்துவிட்டது. அதை அவள் வெளிக்காட்டாத அதேநேரத்தில், ஆண்டனி தன்னைப் பிரிந்து சென்றுவிடாமல் இருக்க அவன் மீது அளவுக்கும் அதிகமாக அன்பைப் பொழிய ஆரம்பித்தாள். அவனும் அவளது அன்பு மழையில் ஆடிப்போய்விட்டான்.

வெற்றிவிழா

கி.மு.35 இறுதியில் கிளியோபாட்ரா, ஆண்டனியின் படை ஆர்மீனியாவை முற்றுகையிட்டது. அதில், அவர்களுக்குப் பெரும் வெற்றியும் கிடைத்தது. ஆர்மீனியா நாட்டின் மன்னன் கைது செய்யப்பட்டு இழுத்து வரப்பட்டான்.

ஆர்மீனியா வெற்றியைப் பெரிய விழாவாகக் கொண்டாட முடிவெடுத்தாள் கிளியோபாட்ரா. கி.மு.34-ல் அந்த விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஊர்வலமும் நடந்தது. கிளியோபாட்ரா, ஆண்டனி மற்றும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் ஊர்வலத்தில் தெய்வங்களுக்கு இணையாக அழைத்து வரப்பட்டனர்.

கிளியோபாட்ரா புதிய ‘ஐஸிஸ்’ தெய்வமாகவும், ஆண்டனி புதிய ‘டயோனிஸஸ்’ தெய்வமாகவும் எகிப்து மக்களால் போற்றப்பட்டனர். கிளியோபாட்ரா பேச்சை கிளிப் பிள்ளையாக கேட்கும் அவள் வழி வந்த சிறுவன் 15-வது டாலமி, ‘மன்னர் மன்னன்’ என்ற பட்டத்துடன் எகிப்து அரசனாகப் பதவியேற்றான். கிளியோபாட்ராவுக்கு ‘அரசர்களின் அரசி’ என்ற பட்டம் சூட்டப்பட்டது.

இந்த வெற்றி விழாவில் கைது செய்யப்பட்ட ஆர்மீனியா நாட்டு மன்னன் கிளியோபாட்ரா முன்பு மண்டியிட பணிக்கப்பட்டான் (கிளியோபாட்ரா மட்டுமின்றி, அக்கால அரச பரம்பரையினர் எதிரிகளை இப்படித்தான் நடத்தினார்கள்). ஆனால், அவன் மண்டியிட மறுத்துச் சீறினான்.

அவனது சுயமரியாதையைப் புரிந்து ஏற்றுக்கொண்ட கிளியோபாட்ரா, அவனைக் கொலை செய்ய உத்தரவிடாமல், அவனையும் அவனது குடும்பத்தினரையும் அரசியல் கைதியாகச் சிறை வைக்க உத்தரவிட்டாள். கிளியோபாட்ராவின் இந்த பெருந்தன்மையான முடிவு வரலாற்று ஆய்வாளர்களால் வியப்பாகப் பார்க்கப்படுகிறது.

வாரிசுகளுக்கு அரசுரிமை

வாரிசுகளுக்கு அரசுரிமை நடந்து முடிந்த ஆர்மீனிய வெற்றி விழாவின் தொடர்ச்சியாக, கிளியோபாட்ரா, ஆண்டனியின் தலைமைக்குக் கீழ் வந்த சில பகுதிகள் அவர்களது குடும்ப வாரிசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

கிளியோபாட்ராவுக்கும் ஆண்டனிக்கும் பிறந்த இரட்டையரான அலெக்ஸாண்டர் ஹீலியாசுக்கும், கிளியோபாட்ரா செலினுக்கும் ஆர்மீனியா, மெடியா, யூபிரேட்ஸ் பகுதிகளை ஆளும் அரசுரிமை அளிக்கப்பட்டது.

கிளியோபாட்ராவுக்கும் ஆண்டனிக்கும் பிறந்த, இரண்டே வயது ஆன டாலமி பிலடெல்பஸ் வடக்கு சிரியா மற்றும் சிலிசியா நாடுகளின் மன்னனாக முடிசூட்டப்பட்டான்.

Related Post

ஆனால், கிளியோபாட்ராவுக்கும் ஜூலியஸ் சீஸருக்கும் பிறந்த டாலமி சீஸருக்கு ஆட்சிப் பகுதிகள் வழங்கப்படவில்லை. அவனை, ரோமாபுரியின் மன்னனாக்க வேண்டும் என்பது கிளியோபாட்ராவின் நெடுநாள் கனவு. அதனால்தான், இந்த விழாவில் அவனுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.

அதோடு, நடந்த வெற்றி விழா பற்றிய கிளியோபாட்ரா, ஆண்டனி இருவரது உருவமும் பதிக்கப்பட்ட நாணயங்களும் வெளியிடப்பட்டன. கிளியோபாட்ராவின் தலை உருவம் இடம் பெற்ற நாணயத்தின் அடியில் ‘அரசர்களின் அரசி’ என்ற குறிப்பும், ஆர்மீனியன் மணிமுடியை தரித்த ஆண்டனியின் தலைப்பகுதி இடம்பெற்ற அதே நாணயத்தின் பின்பக்கத்தில் ‘ஆர்மீனியா வெற்றி கொள்ளப்பட்டது’ என்ற அடிக்குறிப்பு வாசகமும் இடம்பெற்றது.

தவறான பரப்புரை

எகிப்தில் நடைபெற்ற இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை அறிந்த ஆக்டேவியன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். ஆண்டனியை வெளிப்படையாக விமர்சனம் செய்யத் துவங்கியவன், அவன் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிக்கிடந்து அவளுக்கு சேவை செய்வதாக ரோமாபுரி முழுவதும் பரப்புரை செய்தான்.

இதன் தொடர்ச்சியாக கிளியோபாட்ரா, ஆண்டனி குறித்த உண்மைக்கும் புறம்பான பல தகவல்கள் ரோமாபுரி மக்களிடையே பரப்பப்பட்டன.

கிளியோபாட்ரா ஒரு வேசி. தனக்குப் பிடித்த ஆண்களை மயக்கி, தன் விருப்பத்திற்கு எல்லாம் உட்படுத்துபவள்தான் அவள். அவள், தன்னுடன் உறவு வைத்துக்கொண்ட ஆண்டனி அல்லாத பிற ஆண்களைக் கொலை செய்து விடுவாள்… என்பன போன்ற பல தவறான தகவல்களை ரோமாபுரி மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு செய்தான் ஆக்டேவியன்.

அதோடு அவன் நின்றுவிடவில்லை. இப்படியே விட்டால், ரோமாபுரியின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளையும் தனக்கும் கிளியோபாட்ராவுக்கும் பிறந்த வாரிசுகளுக்கு ஆண்டனி எழுதி வைத்து விடுவார் என்றும் கூறி, ரோமாபுரி மக்களைத் தூண்டிவிட்டான்.

தனக்கு எதிராக ரோமாபுரியில் ஆக்டேவியன் செய்யும் சதி வலை பற்றி அறிந்த ஆண்டனி, அவனுக்குக் காட்டமாகவே ஒரு கடிதம் எழுதினான்.

“ஏன் நீ இப்படி மாறிவிட்டாய்? உன் மனநிலையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விட்டதா? நான் ஒரு அரசியுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறேன் என்கிற ஆதங்கமா? ஒருபோதும் நீ அப்படி எண்ணாதே. நீ வேசி என்று பரப்புரை செய்யும் கிளியோபாட்ரா எகிப்துக்கு அரசி மட்டுமல்ல; எனக்கு மனைவியும் கூட! 

… எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு இன்றோ நேற்றோ பூத்ததல்ல; எங்கள் உறவு மலர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது, மனைவி அல்லாத வேறு ஒருத்தியுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறான் என்று என்னை விமர்சனம் செய்யும் நீ மட்டும் யோக்கியமானவனா? நீ, உன் மனைவி லிவியாவுடன் மட்டும்தான் படுக்கையை பகிர்ந்து கொள்கிறாயா? உனது வெள்ளை உடல் வேறு எந்த பெண்ணையும் தழுவவில்லையா?”… என்று நீள்கிறது அந்த கடிதம்.

ஆண்டனியை அழிக்க முடிவு

ஆண்டனி எழுதிய இந்தக் கடிதத்தைப் படித்த ஆக்டேவியன், அதை அதே வேகத்தில் கிழித்து எறிந்ததோடு, தனது வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் ஆண்டனியை எப்படியும் அழித்தே தீருவது என்ற உறுதியான முடிவுக்கும் வந்தான்.

அதற்கு ஆயுதமாக அவன் கையில் எடுத்தது, ரோமாபுரியில் ஆண்டனி எழுதி வைத்துவிட்டுச் சென்ற அவனது உயிலை. ஒருவர் தன்னைப் பற்றி எழுதி வைத்துள்ள உயிலை, அவர் உயிரோடு இருக்கும்போதே கைப்பற்றுவதும், அதை பலர் அறியச் செய்வதும் பெரும் குற்றம். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், ஆண்டனி எழுதி வைத்திருந்த உயிலின் ரகசியத்தைப் பலரும் அறியும் வகையில் வெளிப்படுத்த தயாரானான் ஆக்டேவியன்.

-தொடரும்

Recent Posts

கிளியோபாட்ரா-55 தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு

தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More

2 years ago

கிளியோபாட்ரா 54 கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு!

கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More

2 years ago

கிளியோபாட்ரா 53 ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை

ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More

2 years ago

கிளியோபாட்ரா-52 புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை

புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More

2 years ago

51 ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்..!

ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More

2 years ago

கிளியோபாட்ரா-50 ஆண்டனியின் பரிதாப முடிவு!

கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More

2 years ago