வரலாறு

தென்னகத்தைத் தேடி வந்த இஸ்லாம்..!

Published by
டாக்டர் எஸ்.பத்மநாபன்
Share

தென்னகத்தைத் தேடி வந்த இஸ்லாம்

தென்னிந்திய இஸ்லாமியர் வரலாற்றிற்கும், வட இந்திய இஸ்லாமியர் வரலாற்றிற்கும், அடிப்படையிலேயே வேறுபாட்டை நாம் காணலாம்.

வட இந்தியாவில் இஸ்லாமியர்கள் நாடு பிடிக்கும் ஆசையுடனும், கொள்ளையிடும் எண்ணத்துடனும் தரைவழியாக அடியெடுத்து வைத்தனர். ஆனால் தென்னிந்தியாவில் அவர்கள் வணிகர்களாகவும், சமயத் தூதுவர்களாகவும் கடல் வழியே வந்தனர்.

இஸ்லாம் சமயம்

வடநாட்டில் இஸ்லாமிய சமயம் பரவுவதற்கு நெடு நாட்களுக்கு முன்னரே தென்னகம் அரபு நாட்டு வணிகர்களோடு தொடர்பு கொண்டிருந்தது என இந்திய வரலாற்றிலிருந்து நாம் அறியலாம்.

கிறிஸ்து பிறப்பதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே தென்னிந்திய வாணிபம் கிரேக்க நாட்டிலும், ரோம் நாட்டிலும் அரபு நாட்டிலும் சிறப்புற்று வளர்ந்திருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அரபு நாட்டவர்களுடன் கொண்ட நெடுநாளைய தொடர்பிலேதான் இந்திய நாட்டின் மேற்கத்தைய கடல் அரபிக்கடல் என அழைக்கப்பட்டு வருகிறது எனலாம்.

குமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் வருகை குறித்து சரித்திரமும், கல்வெட்டு ஆதாரங்களும் சரிவரக் கிடைக்காததால் மேற்குக் கடற்கரையில் அவர்கள் வந்த வரலாற்றையும், அப்பகுதியில் வழங்கப்படும் கர்ண பரம்பரைக் கதைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும்.

அரபு நாட்டு வணிகர்கள்

இந்தியாவிலிருந்து மிளகை ஏற்றுமதி செய்யும் நோக்குடன் அரபு நாட்டு வணிகர்கள் சேரநாடு வந்து மிளகை பெருமளவில் வாங்கிச் சென்றனர்.

மேற்குக் கடற்கரையில் முசிறி முக்கியமானதொரு துறைமுகமாக இருந்தது. அங்கு அரபு நாட்டினர் தங்கி வியாபாரம் செய்தனர். பெரியாற்று முகத்திலுள்ள முசிறியின் சிறப்பை

“யவனர் தந்த வினைமான் நன் கலம்

பொன்னொடு வந்து கறியோடு பெயரும்

வளம் கெழு முசிறி”

என அகநானூறும் (பாடல் 139)

“முழங்கு கடல் முழவின் முசிறி “

எனப் புறநானூறும் (பாடல் 343) எடுத்துரைக்கின்றன.

இத்துறைமுகத்தின் அருகே கொடுமணம், பந்தர் என்னும் ஊர்கள் இருந்தன என்று சங்க காலத்து இலக்கியமான பதிற்றுப்பத்து கூறுகின்றது.

“இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து

நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்

கமழும் தாழைக் கானலம் பெருந்துறை “

-ஆறாம்பத்து 5:3-5

“கொடு மணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு

பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்

கடனறி மரபிற் கைவல் பாண!

தென் கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை”

-ஏழாம்பத்து 7:1-4

“கொடு மணம்பட்ட வினைமாண் அருங்கலம்

பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம்”

-எட்டாம்பத்து 4:5-6

இப்பாடல்களிலிருந்து பந்தரில் கலை நுட்பம் வாய்ந்த பொன் நகைகளும், தமிழகத்தின் புகழை உலகறியச் செய்த நன் முத்துக்களும் விற்கப்பட்டன என அறிகிறோம்.

பந்தர்

பந்தர் எனும் சொல்லே அரபிய மொழிதான். பந்தர் என்றால் அங்காடி என்று பொருள். கிழக்குக் கடலோரத்தில் உள்ள பறங்கிப் . பேட்டையின் பழைய பெயர் மகமது பந்தர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள பந்தர் தெருவில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே வியாபாரம் செய்கின்றனர். பட்டினைப்பாலை குறிப்பிடும் நீரின் வந்த பரிப்புரவி (வரி 185) அரபு நாட்டுக் குதிரையாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

இவ்வாறு பண்டைய தமிழகத்திற்கும் அரபு நாட்டுக்கும் உள்ள தொடர்பை சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மேலே குறிப்பிட்ட பந்தர் என்ற நகர்தான் இன்றைய கேரளத்தில் கொய்லாண்டி வட்டத்திலுள்ள பந்தாளயினி கொல்லம் என்று கூறுகிறார் பேராசிரியர் இளங்குளம் பி.என். குஞ்ஞன் பிள்ளையவர்கள்.

கோட்டாறு பள்ளி வாசல்

அரபு நாட்டுக் குதிரைகள்

கோட்டாறு கி.பி. முதல் நூற்றாண்டிலேயே வணிகத்தில் வளம் பெற்றிருந்தது என்ற தாலமியின் நிலநூலும், பிளினியின் பயண நூலும் கூறுகின்றன.

கோட்டாற்றுச் சந்தையில் பண்டைக்காலத்தில் அரபு நாட்டுக் குதிரைகள் விற்கப்பட்டன என்று அறிய முடிகிறது.

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் தூண் ஒன்றில் அரபு நாட்டு வணிகர் போல் தாடியுடனும், தொப்பியுடனும் ஓர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. 

வடிவீஸ்வரத்தை அடுத்துள்ள இடலாக்குடியில் வையாளிவிளையில் அரபு நாட்டுக் குதிரை வணிகர்கள் குடியிருப்பு ஒன்று இருந்ததாகத் தெரியவருகிறது. 

வையம் என்ற சொல் குதிரை பூட்டிய தேரைக் குறிப்பிடும். இச்சொல் அதே பொருளில் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. 

“வையமும் பாண்டியும் மணித்தேர் கொடுஞ்சியும்” 

என்பது சிலப்பதிகார வரிகள். (ஊர் காண் காதை வரி 168).

கோட்டாற்றில் வையாளிவிளை இருப்பது அங்கு நடைபெற்ற அரபு நாட்டு குதிரை வாணிபத்தை உறுதிப்படுத்துகின்றது.

குளச்சல் வழியாக

அரபு நாட்டு வணிகர்கள் கோட்டாற்றுக்கு எப்படி வந்தார்கள்? என்ற கேள்வி இங்கே எழுகின்றது. அவர்கள் குளச்சல் வழியாகத்தான் வந்திருக்க வேண்டும். 

குளச்சல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு துறைமுகமாகும். கருங்கடலை அடுத்துள்ள ஒரு பெரிய வணிகத்தலம் குளச்சிஸ் என்று அழைக்கப் படுவது இங்கே குறிப்பிடத்தக்கது. 

குளச்சலின் பழைய பெயர் குளச்சை தான். இன்னும் வயதானவர்கள் குளச்சலை குளச்சை என்றுதான் கூறுவர். 

பார்திபசேகரபுரம் கல்வெட்டில் குளச்சை இடம் பெற்றுள்ளது. (Travancore Archaeological Series Volume III Part II Page. 55) கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே யவனர்கள் குளச்சல் துறைமுகம் வந்திருக்க வேண்டும். 

யவனம் துறைதான் எனயம் துறை என்று மருவியிருக்க வேண்டும். 

முட்டம் கடற்கரையில் முன்பு மழைப் பெய்யும்போது அந்நிய நாட்டு நாணயங்கள் மேல் மட்டத்திலேயே கிடைப்பதுண்டு என்ற தகவல் இங்கே குறிப்பிடத்தக்கது.

முகமது நபி

இஸ்லாமிய சமயத்தை தோற்றுவித்த முகமது நபி மக்காவில் கி.பி.571-ல் பிறந்தார். அதைத் தொடர்ந்து அரபு நாடு முழுவதும் இஸ்லாமிய சமயத்தைத் தழுவியது. 

நபி இறந்து ஒரு நூற்றாண்டு முடிவதற்குள் இஸ்லாமிய சமயத் தூதுவர்கள் கேரளக் கடற்கரையோரத்தில் குடியேறி தங்கள் சமயக் கருத்துக்களை மக்களிடையே பரப்பினர். 

அப்போது மலபாரை ஆண்டு வந்த சிற்றரசனை பேரரசனாக்க இஸ்லாமியர்கள் உதவிகள் செய்தனர் கேரளோற்பத்தி என்னும் பழைய மலையாள நூல் குறிப்பிடுகிறது. 

ஹிஜ்ரி 90ஆம் ஆண்டில் (கி.பி. 712) வாலிட் காலிபின் ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்கள் மலபாரை வந்தடைந்தனர் என்று கிறிஸ்தவ மதத் தூதரான பர்த்தோலோமை தெரிவிக்கிறார். இதை மக்கன்சி குறிப்பேடும் (Mackenzie Manuscripts) உறுதிப்படுத்துகின்றது. 

வடமலபாரிலுள்ள பந்தாளயினி கொல்லம் என்ற இடத்திலுள்ள கல்வெட்டு ஒன்று – ஹிஜ்ரி 166 ஆம் ஆண்டு (கி.பி.751) இஸ்லாமியர் ஒருவர் எங்கு வைத்து இறந்தார் என்று தெரிவிக்கின்றது. 

டாக்டர் சுப்பிரமணிய அய்யர் 1901 ஆண்டு தயாரித்த திருவிதாங்கூர் மக்கள் தொகை அறிக்கையில் இஸ்லாமியர்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கேரளத்தை வந்தடைந்தனர் என்று குறிப்பிடுகிறார். 

குமரியிலும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாமியர் வந்திருக்கவேண்டும்.

சேரமான் பெருமாள்

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சேர நாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் இஸ்லாமைத் தழுவியது குறித்து வழங்கப்படுகின்ற ஒரு பரம்பரைக் கதையை மலபாரின் வரலாற்றில் (Malabar Manual) திரு. லோகானும், இதே மன்னர் மக்கா சென்று அப்துல் ரகுமான் சாமூரி என்ற பெயரைக் கொண்டு அங்குச் சிலகாலம் தங்கினார் என்ற கதையைத் திருவிதாங்கூர் சரித்திரத்தில் திரு. டி. வேலுப்பிள்ளையும் குறிப்பிடுகின்றனர். 

ஆனால் சைவ சமயத்தவர்கள் போற்றிப் புகழும் கழறிற்றறிவார் நாயனார் என்ற சேரமான் பெருமாள் வெள்ளைக் குதிரையில் ஏறி கைலாயம் சென்றதாக சேக்கிழார் பெருமான் நாயன்மார்களின் வரலாறு குறித்து எழுதிய பெரியபுராணம் கூறுகின்றது.

கொடுங்கல்லூரில் காணப்படும் பழமையான பள்ளி ஒன்று அக்கால மன்னரின் உதவியால் எழுப்பப்பட்ட காரணத்தால் சேரமான் பள்ளி என்று அழைக்கப்படுகிறது.

அதனால், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் சேர நாட்டிலே இருந்தனர் என்றும், அந்நாட்டு மன்னரின் ஆதரவைப் பெற்றனர் என்றும் கருதப்படுகிறது. 

இபுன் தினார்

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரபு நாட்டுத் துறவியான மாலிக் இபுன் தினார் மேலைக் கடற்கரையோரத்தில் வருகை தந்து பல பள்ளிகளை அங்கு எழுப்பினார் என்று இஸ்லாமிய சரித்திர நூல்கள் எடுத்துரைக்கின்றன. 

தேங்காய்பட்டினத்தில் ஒரு பள்ளியும், திருவிதாங்கோட்டில் ஒரு பள்ளியும் மாலிக் இபுன்தினாரால் எழுப்பப்ட்டதாகக் கூறுவர். 

தினாருடன் இந்திய நாடு வந்த மலுக்கு முகமதின் கல்லறை திருவிதாங்கோட்டில் அமைந்துள்ளது.

மேலே குறிப்பிட்ட செய்திகளின் அடிப்படையிலும், கோட்டாற்றின் வணிகச் சிறப்பையும் வைத்து நோக்கும் போது இஸ்லாமியர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வந்திருக்க வேண்டும் என்று கொள்ளலாம். 

அரபு நாட்டுக் குதிரைகள் கோட்டாற்று அங்காடியில் விலைபோயின என்றும், அரபு நாட்டு வியாபாரிகள் கோட்டாற்றிலும், அன்று வேணாட்டின் தலைநகராகத் திகழ்ந்த திருவிதாங்கோட்டிலும் தாவளமிட்டிருந்தனர் என்றும் கூறுவர். 

கப்பலேறி வந்த வணிகர்களோடு சில சமயத் தூதுவர்களும் இங்கு வந்துத் தங்கி தங்கள் சமயக்கருத்துக்களை மக்களிடையே பரப்பியதாகக் கருத இடமிருக்கிறது. 

இவ்வாறு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் குமரிமாவட்டத்தில் கோட்டாற்றிலும், திருவிதாங்கோட்டிலும் முதன் முதலில் இஸ்லாமிய சமயம் தோன்றியிருக்க வேண்டும்.

Recent Posts

கிளியோபாட்ரா-55 தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு

தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More

2 years ago

கிளியோபாட்ரா 54 கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு!

கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More

2 years ago

கிளியோபாட்ரா 53 ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை

ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More

2 years ago

கிளியோபாட்ரா-52 புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை

புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More

2 years ago

51 ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்..!

ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More

2 years ago

கிளியோபாட்ரா-50 ஆண்டனியின் பரிதாப முடிவு!

கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More

2 years ago