Categories: வரலாறு

கிளியோபாட்ரா – 6 சீஸருக்கு எதிராகச் சதி

Published by
‘நவரசு’ நெல்லை விவேகநந்தா
Share

சீஸருக்கு எதிராகச் சதி

சிரியாவுக்குத் தப்பிச்சென்ற கிளியோபாட்ரா, கார்ஸா என்ற இடத்திற்கு வடக்கே உள்ள கடற்கரை பகுதியில் படை உருவாக்க தனது ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டிருந்தாள்.

அதேநேரத்தில், ரோமாபுரியில் ஆட்சியைக் கைப்பற்ற ரோமானிய செனட் உறுப்பினர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

ரோமானிய அரசியலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஜூலியஸ் சீஸரின் ஆதரவாளர்களும், இரண்டாம் இடத்தில் இருந்த பாம்பேயின் ஆதரவாளர்களும் அதிகமாக மோதிக்கொண்டனர்.

ஜூலியஸ் சீஸர்

இதையொட்டி, கி.மு.48 ஆகஸ்ட் மாதம் பர்சலஸ் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ரோமானிய வேந்தர் ஜூலியஸ் சீஸரிடம் படுதோல்வி அடைந்த பாம்பே, எகிப்து மன்னரும், கிளியோபாட்ராவின் கணவனும், தம்பியுமான 13-ம் டாலமியின் ஆதரவைப் பெறுவதற்காக அலெக்ஸாண்டிரியாவுக்கு ஓடிவந்தான்.

ஆனால், நடந்ததோ வேறு.

பாம்பேயை ஆதரித்தால் ரோமானிய வேந்தர் ஜூலியஸ் சீஸரின் கோபத்திற்கு ஆளாகலாம் என்று அமைச்சர்கள் உதவியுடன் கணக்கு போட்டான் 13-ம் டாலமி. அதனால், ஜூலியஸ் சீஸரை ஆதரிப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தான்.

இதுதான் ரோமானிய நாகரீகம்

அதன்பின் நடந்தது என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், ரோமானிய அரசியல் பற்றியும், யார் இந்த ஜூலியஸ் சீஸர் என்றும் பார்த்துவிடுவோம்.

முதலில் அரசியல்…

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீபகற்ப நாடு இத்தாலி. கி.மு. ஆயிரமாவது ஆண்டில் இங்கு பல இனத்தவர் வந்து குடியேறினார்கள். இப்படி பல்வேறு இனத்தவர்களைக் கொண்ட நாகரிகம்தான் ரோமானிய நாகரிகம்.

இங்கு ஒரு பேரரசை முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள், ஓநாய்களால் எடுத்து வளர்க்கப்பட்ட ரோமுலஸ், ரீமஸ் என்ற இரட்டையர் என்கிறது ரோமானிய மரபுவழிக்கதை.

இதன்படி, கி.மு.753ல் ரோமானியப் பேரரசின் தலைநகரான ரோம் நகர் உருவாக்கப்பட்டது. இந்த நகர் ஏழு மலைகளால் சூழப்பட்டு இருந்ததால், ரோம் நகரை ‘ஏழு குன்றுகளின் நகரம்’ என்று அப்போது அழைத்தனர்.

கி.மு.500 வரையே ரோமில் மன்னராட்சி நீடித்தது. அதன் பிறகு மக்கள் செய்த கிளர்ச்சியால் மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்தது.

குடியரசு

இங்குள்ள மக்களாட்சியைக் குடியரசு என்றார்கள். மன்னர்களுக்குப் பதிலாக கன்சல்கள் எனப்பட்டவர்கள் நாட்டை ஆண்டனர். அதாவது, இப்போதைய நம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களைப் போன்றவர்கள்.

ஆனால், இவர்களைத் தேர்வு செய்தவர்கள் சாமானிய மக்கள் அல்ல; பெட்ரிஷியர்கள் என்ற பிரபுக்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதேபோல், சாதாரண மக்கள் பிரதிநிதிகள் கொண்ட செனட் சபையும் இருந்தது.

கன்சல்கள் இடையே பிரச்சினை ஏற்படும்போது, செனட் சபை முக்கிய முடிவெடுத்தது. இதுதவிர காம்ஷியா, செஞ்சுரியாடா போன்ற கீழ்சபைகளும் இருந்தன. என்றாலும், இந்த கீழ்சபையை செனட்டே கட்டுப்படுத்தியது.

சர்வாதிகாரி

நாட்டிற்குப் பிற நாட்டினரால் ஆபத்து என்று ஒன்று வந்தால், முக்கிய முடிவெடுக்க ஒருவர் வேண்டுமே…? அவரும் இருந்தார். அவர்தான் சர்வாதிகாரி.

அதாவது, சர்வ வல்லமை கொண்டவர். நம் இந்திய பாராளுமன்றத்தில் அதிகாரம் கொண்ட பிரதமர் போன்றவர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்திய பாராளுமன்றத்தில் பிரதமர் ஆக வேண்டும் என்றால் பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு வேண்டும். அதுபோல், ரோமானியப் பேரரசின் சர்வாதிகாரியாக ஒருவர் ஆகவேண்டும் என்றால், அவரும் கன்சல்கள் மற்றும் செனட் சபையின் பெரும்பான்மை ஆதரவைப் பெறவேண்டும்.

அந்த வகையில், பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற ஜூலியஸ் சீஸரே ரோமப் பேரரசின் சர்வாதிகாரியாக, ராணுவ தலைவராக, முதன்மை வேந்தராக இருந்து வந்தார்.

சீஸர்

கி.மு. 100ம் ஆண்டு ஓர் ஜூலை மாதம் அவுரெலியா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் ஜூலியஸ் சீஸர். கி.மு.84-ம் ஆண்டு தனது 16-வது வயதில் கொர்னெலியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

19-வது வயதில் ரோமானியப் படையில் வீரராக சேர்ந்தார். மிதிலின் என்ற இடத்தைக் கைப்பற்ற நடந்த போரில் கப்பல்படையில் சிறப்பாகச் செயலாற்றிய ஜூலியஸ் சீஸர், அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.

பின்னர் ரோம் திரும்பிய சீஸர், அரசியலில் தீவிரமாக இறங்கினார். குழந்தை எதுவும் பிறக்காத நிலையில் கி.மு.69ல் சீஸரின் மனைவி கொர்னெலியா இறந்துபோனாள் (இதே ஆண்டில்தான் எகிப்தில் பேரழகி கிளியோபாட்ரா பிறந்தாள்).

முதல் மனைவி இறந்த மூன்றாவது ஆண்டில், அதாவது கி.மு.67ல், மறைந்த ரோமானியப் பேரரசின் சர்வாதிகாரியான சுல்லாவின் பேத்தியும், பாம்பேயின் சகோதரியுமான பாம்பியாவை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டார் சீஸர். தனது தனித் திறமையால் ரோமானியப் படைத்தளபதி ஆனார்.

அதேநேரம், இரண்டாம் மனைவியின் சகோதரனான பாம்பேவும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு சீஸருக்கு இணையாக விளங்கினான்.

ஆனால், சீஸரே ரோமானிய செனட் உறுப்பினர்கள் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று ரோமப் பேரரசுக்கு சர்வாதிகாரி ஆனார். ராணுவமும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

ரோமப் பேரரசில் குடியாட்சி நடந்ததால் அரசர், பேரரசர் என்ற பேச்சுக்கெல்லாம் அங்கே இடம் கிடையாது. சர்வாதிகாரிதான் அங்கே பேரரசர்!

Related Post

ஆனால், ஜூலியஸ் சீஸரை, கிளியோபாட்ரா உள்ளிட்ட மற்ற நாட்டினர் பேரரசர் என்றே அழைத்தனர். நாமும் அவரை அவ்வாறே அழைப்போம்.

சரி… இனி விஷயத்துக்கு வருவோம்…

பாம்பே கொல்லப்பட்டான்!

ஜூலியஸ் சீஸரிடம் தோல்வியுற்று அலெக்ஸாண்டிரியாவுக்கு தஞ்சம் புக வந்த பாம்பே, கி.மு.48 செப்டம்பர் மாதம் அலெக்ஸாண்டிரியா கடற்கரையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டான்.

பாய்மரக் கப்பலில் இருந்து கடற்கரையில் கால் பதித்த பாம்பே, தனக்கு எதிரே சற்றுத் தொலைவில் 13-ம் டாலமியின் படைவீரர்கள் சிலர் நிற்பதைக் கண்டான்.

தனக்குப் பாதுகாப்புக் கொடுக்கத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தப்புக் கணக்குப் போட்ட பாம்பே, அவர்களை நோக்கி உற்சாகத்துடன் சென்றான்.

“என்னை வரவேற்க வந்ததற்கு நன்றி. உங்கள் மன்னருக்கும் எனது நன்றியை தெரிவித்து விடுங்கள்…” என்று அவன் சொன்னபோதே, ஒரு வீரனின் கூரிய வாள் பாம்பேயின் உடலைத் துளைத்தது.

அதிர்ச்சியான பாம்பே சுதாரிப்பதற்குள் அடுத்த வீரன் இன்னொரு வாளை அவன் மீது பாய்ச்சினான். அடுத்த நிமிடமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தான் பாம்பே.

அவனது உடலை கடற்கரையோரம் வீசியெறிந்துவிட்டு, மன்னனிடம் தகவலைக் கூற அரண்மனைக்கு விரைந்தனர் வீரர்கள்.

ஆனால், மன்னன் 13-ம் டாலமியோ கடலுக்குள் சற்றுத் தொலைவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு கப்பலில் நின்று கொண்டிருந்தான்.

பாம்பே கொலை செய்யப்பட்டதை பார்த்துக் கொண்டுதான் இருந்தான் அவன். அவனுடன், அவனது பிரதான அமைச்சர்கள் சிலரும் இருந்தனர்.

சீஸரின் எகிப்து வருகை

பாம்பே படுகொலை செய்யப்பட்டு நான்கு நாட்கள் இருக்கும். ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீஸர் எகிப்துக்குப் பெரும் படையுடன் வந்தார்.

தன்னிடம் தோற்றுத் தப்பியோடிய பாம்பேயைக் கைது செய்யும் எண்ணத்திலும், எகிப்துப் பேரரசை ரோமப் பேரரசுடன் இணைக்கும் வகையிலும் அவரது படையெடுப்பு அமைந்தது.

அலெக்ஸாண்டிரியாவைத் தனது பெரும் படையுடன் ஜூலியஸ் சீஸர் முற்றுகையிட்டுள்ளார் என்பதை அறிந்த 13-ம் டாலமியின் ஆதரவாளர்கள் பரபரத்துப் போனார்கள்.

அரசனும் சிறுவனுமான 13-ம் டாலமி அதை அறிந்தபோது அழாத குறையான நிலைக்கு ஆளாகிவிட்டான். இருந்தாலும், தன்னைத் தேற்றிக்கொண்டு அலெக்ஸாண்டிரியா வந்த சீஸரைக் காண அமைச்சர்களுடன் சென்றான்.

சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்த சீஸரைப் பார்த்த 13-ம் டாலமிக்கு பயமே வந்துவிட்டது. அவன் சிறுவன் அல்லவா?

இப்போதுதான் முதன் முறையாக ஒரு மாபெரும் வீரனைப் பார்க்கிறான். அதனால் பயந்தபடியே சீஸரை நெருங்கினான். அவனைச் சுற்றி வந்து கொண்டிருந்த அமைச்சர்கள், அவனை தைரியப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

சீஸருக்குப் பரிசு

ஜூலியஸ் சீஸரை முதன் முதலாக கண்ட 13-ம் டாலமி, அவரை பயந்தபடியே வணங்கினான். பதிலுக்கு சீஸரிடம் இருந்து எதிர்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை. 13-ம் டாலமியுடன் வந்த அமைச்சர்களும், சீஸரின் காலில் விழுந்து வணங்கி, தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டனர்.

அடுத்ததாக சீஸரிடம் பேசிய 13-ம் டாலமி, “நான் உங்களுக்கு, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பரிசு ஒன்றை கொண்டு வந்திருக்கிறேன்…” என்றான்.

சீஸருக்குப் புரியவில்லை.

“என்னது… நான் ஆவலுடன் எதிர்பார்த்த பரிசா?”

“ஆமாம் பேரரசே…!”

“சரி… நீ கொண்டு வந்த பரிசைக் கொடு. பார்க்கலாம்…” என்று கர்ஜனையோடு சொன்னார் சீஸர்.

அடுத்த நொடியே தனது அமைச்சர்களைப் பார்த்தான் 13-ம் டாலமி. அவர்கள் ஒரு பெரிய தாம்பாளத் தட்டில் ஒரு பொருளை வைத்து, அதை ஒரு துணியால் மூடிக்கொண்டு வந்தனர்.

அதைப் பார்த்த சீஸருக்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியது. அது என்ன பொருள் என்பதை அறிய ஆவலானார்.

சீஸர் முன்பு வைக்கப்பட்டதும் அந்த தாம்பாளத்தில் இருந்த பொருள் மீது மூடப்பட்ட துணியை விலக்கினான் ஒரு வீரன். அந்தப் பொருளைக் கூர்ந்து நோக்கினார் சீஸர்.

துணி விலக்கப்பட்ட அடுத்த நொடியே திடுக்கிட்டார். அந்தத் தட்டில் இருந்த பொருள் – நான்கு நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பாம்பேயின் தலை!

-தொடரும்

Recent Posts

கிளியோபாட்ரா-55 தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு

தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More

2 years ago

கிளியோபாட்ரா 54 கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு!

கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More

2 years ago

கிளியோபாட்ரா 53 ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை

ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More

2 years ago

கிளியோபாட்ரா-52 புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை

புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More

2 years ago

51 ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்..!

ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More

2 years ago

கிளியோபாட்ரா-50 ஆண்டனியின் பரிதாப முடிவு!

கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More

2 years ago