அறிஞர் அண்ணாவுடன் கி.ஆ.பெ.விசுவநாதம்
முத்தமிழ்க் காவலர் எனத் தமிழுலகம் போற்றும் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம், பள்ளிக்கூடம் சென்று படிக்காத மேதை. தாமாகவே கற்றுப் புலமை பெற்றவர். பல்கலைக் கழகத்தால் ‘அறிவர்’ (டாக்டர்) பட்டமும் பெற்ற பேரறிவாளர்.
அவர் நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராயும் பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தின் முதல் செயலாளராயும் பொறுப்பு வகித்தவர். ஐந்தாயிரம் தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்த பண்பாட்டாளர். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தை முன்நின்று நடத்திய முத்தமிழ்க் காவலர். தமிழிசை இயக்கத்தை மூலை முடுக்கெல்லாம் பரப்பிய இனியவர். சித்த மருத்துவ முறைக்குப் புத்துயிர் அளித்த சித்தர் பெருமகனார்.
சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், வாய்மை வழுவாத வணிகர் எனப் பல்துறை வித்தகர் அவர். பேரறிஞர் அண்ணாவை முதன்முதலில் மேடை ஏற்றிய பெருமைக்கு உரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம்தான். திருச்சிராப்பள்ளியில் நடந்த நீதிக் கட்சி மாநாட்டில் அதன் தலைவர் டாக்டர் சர்.இராமசாமி முதலியாரின் ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்க்க அன்று ஆள் இல்லாமல் தவித்தார்கள் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள்.
இதையறிந்து கூட்டத்தில் இருந்த ஒருவர், தம் பக்கத்தில் இருந்த இளைஞரைச் சுட்டிக்காட்டி. “இவர் பெயர் அண்ணாதுரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர். ஆங்கிலப் புலமை மிகுந்தவர், இவர் அருமையாக தமிழில் மொழிபெயர்ப்பார்” என்றார்.
உடனே, மேடையில் இருந்த கி.ஆ.பெ.விசுவநாதம் கை கொடுத்து அண்ணாதுரையை மேடை ஏற்றினார். பேச்சு முடிந்ததும் இராமசாமி முதலியார். “என் பேச்சைவிட மொழிபெயர்ப்புத்தான் சிறப்பாக இருந்தது” என்று வெகுவாய்ப் பாராட்டினார்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்து ஒன்றாம் ஆண்டு ஒட்டப் பிடாரத்தில் நடந்த கூட்டத்தில் கி.ஆ.பெ. விசுவநாதம் ‘அன்பு’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இதுதான் அவர் பேசிய முதல் மேடைப்பேச்சு. இந்தச் சொற்பொழிவைக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் முன்வரிசையில் உட்கார்ந்து கேட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று நான்காம் ஆண்டு சென்னைத் தேனாம்பேட்டையில் ஓர் உணவு விடுதியில் நடந்த தமது தொண்ணூற்று ஆறாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம். அப்போது “நான் அதிக காலம் உயிருடன் இருக்கமாட்டேன். இந்த நேரத்தில் தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழி குறித்து அரசு ஆணை வந்தால் மகிழ்வோடு உயிர் துறப்பேன்” என உருக்கமாகக் குறிப்பிட்டார். இதுதான் அவர் பேசிய கடைசிப் பேச்சும் விருப்பமும் ஆகும்.
அவர் கூறியது போலவே அந்த ஆண்டிலேயே திசம்பர்த் திங்கள் பத்தொன்பதாம் நாள் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் இயற்கையோடு ஒன்றினார். ஆம். ஐம்பூதங்களில் கலந்தார். சாகும்வரை முத்தமிழுக்காகவே வாழ்ந்தார் அவர். நாமும் தமிழுக்காக வாழ்வோம்; தலைநிமிர்ந்து வாழ்வோம்.
அரியவற்றுள் எல்லாம் அரிதே
பெரியாரைப் பேணித் தமராக் கொளல்”
குறள் (443)
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் பிறந்த இவர். அங்குள்ள காந்திநிகேதன் ஆசிரமத்தில் கல்வி பயின்றவர். காந்திய நெறியில் ஈடுபாடு கொண்டவர். தினத்தந்தி நாளிதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இலக்கிய எழுத்திலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்ட இவர் எழுதிய ‘நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள்’ என்ற கவிதை தொகுப்பு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாராட்டுப் பெற்றது. தொடர்ந்து பல இலக்கிய ஆக்கங்களை எழுதிவருகிறார்.
தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More
கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More
ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More
புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More
ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More
கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More