இந்தப் பட்டணம் 250 வருடங்களுக்கு முன் சில செம்படவர் குடிசைகள் உள்ள ஒரு மணல் வெளியாய் இருந்தது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த மணல் வெளி பெரிய பட்டணமானதை யோசித்தால் எவருக்கும் ஆச்சரியம் உண்டாகாமற்போகாது.
நல்லது, இவ்விடம் கப்பல் தங்கத் தக்க துறையா? அல்லது விசேஷ வர்த்தகம் செய்துகொண்டிருந்த இடமா? இல்லாவிட்டால் ஏதாவது பிரபலமான கைத்தொழில் நடக்கும் ஸ்தாபனமா? யாதொரு யோக்யதையுமில்லையே. மேலும் இத்தேசத்தார் பழமையானவைகளைக் கொண்டாடும் தன்மையுடையவர்களே அன்றிப் புதிதாய் ஒன்றையும் செய்யும் எண்ணமில்லாதவர்கள் என்பது பிரத்தியக்ஷம். இப்படியிருந்தும் இவ்விடத்தில் நூதனமாய் ஒரு பட்டணமுண்டானதை யோசிக்கின்ற யாவருக்கும் ஆச்சரியமாயிருக்கின்றது.