தங்கள் நாடுகளை மறந்து காதலில் விழுந்த சீஸரும் கிளியோபாட்ராவும்

கிளியோபாட்ரா-16 தங்கள் நாடுகளை மறந்து காதலில் விழுந்த சீஸரும் கிளியோபாட்ராவும்..!

தங்கள் நாடுகளை மறந்து காதலில் விழுந்த சீஸரும் கிளியோபாட்ராவும்..!

கிளியோபாட்ராவுடன் நைல் நதிக்கரையோரம் தேனிலவு கொண்டாட வந்த ஜூலியஸ் சீஸர், தேனிலவு நாட்களை உற்சாகமாகக் கழித்தார். நாட்கள் வேகமாக நகர்ந்தன.

சுமார் இரண்டு மாதம்வரை அவர்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள். கிளியோபாட்ரா எகிப்து மக்களை மறந்து போனாள். சீஸர் ரோம சாம்ராஜ்யத்தை நினைத்துப் பார்க்கத் தவறினார்.

கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீஸர் தேனிலவு கொண்டாட்டம் முடிந்தபோது, அவர்களுக்கு மாபெரும் பரிசு ஒன்றும் கிடைத்தது. அந்தப் பரிசு ஒரு உயிர்.

அதுதான், கிளியோபாட்ரா வயிற்றில் உருவான குழந்தை.

கிளியோபாட்ரா கர்ப்பமாகி இருக்கிறாள் என்பதை அறிந்த சீஸர் அதனால் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கிளியோபாட்ராவைக் கண்ணும் கருத்துமாகவே உடனிருந்து பார்த்துக்கொண்டார்.

சீஸரின் மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருந்தது. தனக்கு வாரிசு இல்லையே… என்ற குறை இந்த மூலம் தீரப் போகிறது என்று அவர் எண்ணினார்.

அது என்ன காரணம்? சற்று விரிவாகவே பார்ப்போம்… 

சீஸரின் ‘சந்தேக’ விவாகரத்து

இறந்து போன, ஜூலியஸ் சீஸரின் முதல் மனைவியான கெர்னெலியாவுக்குக் குழந்தை இல்லை. இரண்டாவது மனைவி பாம்பியாவை விவாகரத்து செய்து விட்டார். இரண்டாம் மனைவி விவாகரத்துக்குப் பிறகு மூன்றாவதாக கல்பூர்னியா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 

சீஸர் பாம்பியாவைத் திருமணம் செய்த பிறகுதான் அவரது வாழ்வில் ஏறுமுகம் ஏற்பட்டது. ரோமானிய அரசியலில் மிகவும் பிரபலம் ஆனார். 

அதே மனைவி பிறரால் சந்தேகத்திற்கு உட்பட்டதால் அவளை விவாகரத்து செய்துவிட்டார் சீஸர். அந்த சம்பவம் எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று.

இந்த சம்பவம் நடந்தது கி.மு. 62-ம் ஆண்டு (அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 8). 

அன்றைய தினம் ஜூலியஸ் சீஸரின் மாளிகையில் மதச்சடங்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெண்கள் மட்டும்தான் அந்தச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதால், சீஸரின் மனைவி பாம்பியா தனக்கு வேண்டிய மற்றும் மிகவும் நெருங்கிய உறவுப் பெண்களையே விழாவுக்கு அழைத்திருந்தாள். 

சடங்கு நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு வீரர்களுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், அந்த இடம் முழுக்க பெண்களாகவே தெரிந்தனர். பாதுகாப்புப் படையினரின் பரிசோதனைக்குப் பிறகே அவர்கள் அங்கே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

பெண் வேடத்தில் நுழைந்த ஆண்

ஆனால், இந்த பலத்த பாதுகாப்பையும் மீறி ஒருவன் அங்கே நுழைந்துவிட்டான். அவன் பெயர் ப்யூப்ளியாஸ் கிளாடியஸ் (இதற்கு வசீகரமானவன் என்று அர்த்தம்). அவன் வந்தது பெண் வேடத்தில் என்பதால் அவனைச் சரியாகக் கவனிக்காமல் உள்ளே அனுமதித்துவிட்டனர் படைவீரர்கள்.

சிறிதுநேரத்திற்குப் பிறகுதான் அவனது நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் கவனித்த விழாவுக்கு வந்த பெண்களுக்கு சந்தேகம் வந்தது. வீரர்கள் அவனைப் பரிசோதித்ததில் குட்டு வெளிப்பட்டுவிட… அவனை அப்படியே அமுக்கி பிடித்துவிட்டனர்.

அந்த நேரம் ஜூலியஸ் சீஸர் அங்கே வந்துவிட்டார். மதச்சடங்கில் கலந்து கொள்ள வந்த பெண்களும் பரபரப்பாகிவிட்டனர். அவர்களில் சிலர், சீஸரின் மனைவி பாம்பியா அழைக்கப்போய்தான் அவன் மாறுவேடத்தில் வந்திருக்க முடியும் என்று பேச ஆரம்பித்துவிட்டனர். இந்தப் பேச்சு சீஸரின் காதிலும் விழுந்துவிட்டது. அடுத்த நொடியே அதிர்ச்சி ஆகிவிட்டார்.

சீசரின் மனைவி

“இந்த சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்” என்று கர்ஜித்த சீஸர், அதன்பிறகு தனது மனைவி பாம்பியாவை பார்க்கவே மறுத்துவிட்டார். மறுநாளே அவளை விவாகரத்தும் செய்துவிட்டார்.

பாம்பே கோபம்

தனது சகோதரியை சீஸர் விவாகரத்து செய்துவிட்டார் என்பதை அறிந்த பாம்பே (ரோமானிய அரசியலில் சீஸருக்கு இணையாக வளர்ந்து வந்தவன்தான்) கொதித்தெழுந்தான். அன்று முதல் அவருக்கு முதல் எதிரி ஆகிவிட்டான். மேலும், இருவருக்கும் அரசியல் ரீதியாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் பிரச்சினை இருந்து வந்தது. அதனால், சீஸரை எப்போது விரட்டலாம் என்று காத்திருந்தான் பாம்பே. 

ஆனால்… அவன் சீஸரிடம் தோல்வியுற்று, கிளியோபாட்ராவின் முதல் கணவன் 13-ம் டாலமியின் ஆதரவாளர்களால் தலை கொய்து கொலை செய்யப்பட்டது உங்களுக்குத் தெரிந்ததுதானே?

இந்த சம்பவத்தில் சீஸர் உதிர்த்த, ‘சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்ற வார்த்தை, இன்றும் உலகப் புகழ்பெற்றதாக கருதப்படுகிறது.

ரோமில் பரவிய வதந்தி

கிளியோபாட்ரா தன்னால் கருவுற்று இருப்பதை அறிந்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற சீஸருக்கு இன்னொரு ஆத்ம திருப்தியும் ஏற்பட்டது. தனக்கு கிளியோபாட்ரா எப்படியும் ஒரு ஆண் வாரிசை பெற்றுத் தருவாள் என்று எதிர்பார்த்தார். அதனால் அவர் எகிப்திலேயே கிளியோபாட்ராவுடன் தங்கியிருக்க நேரிட்டது.

அதேநேரம், ரோமிலோ அவரைப் பற்றிய தவறான தகவல்கள் அவரது அரசியல் எதிரிகளால் மக்களிடம் வேகமாக பரப்பப்பட்டன.

‘சீஸர் கிளியோபாட்ராவைத் திருமணம் செய்து கொண்டு விட்டார். வேற்று நாட்டு அரசியான அவளை இந்த ரோமாபுரிக்கும் அரசியாக்க முயற்சிக்கிறார். அதனால், அவரை ரோமானிய முதன்மை வேந்தர் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும்’ என்று பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன.

“நம் மாவீரர் சீஸரா இப்படி கிளியோபாட்ராவின் பேரழகில் மயங்கிக் கிடக்கிறார்? ஒரு மாவீரருக்கு இது அழகா?” என்று ரோமானிய மக்களும் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஆண் குழந்தை பிறந்தது

இந்த சூழ்நிலையில் சரியாக 10 மாதம் ஆவதற்கு முன்பே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் கிளியோபாட்ரா. கி.மு.47ல் இந்தக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘சிசேரியன்’ என்று பெயரிட்டார்கள் சீஸர் – கிளியோபாட்ரா தம்பதியர்.

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *