உலகின் மிக தனிமையான வீடு

உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள்

உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள். 

இப்படியொரு வீட்டில் ஒருநாளாவது வசித்து பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பலரது ஆசையாக இருக்கிறது. ஆனால், அது அத்தனை சுலபமல்ல. அந்த தனிமையான வீடு பற்றி விரிவான பதிவுதான் இது. 

பரந்து விரிந்த நீல நிற கடலுக்கு நடுவே ஒரு பச்சைநிற மலை ஒன்று இருக்கிறது. அதன் நடுவே வெள்ளைப் புள்ளியாக ஒரு வீடு. பார்க்கும் போதே ஒரு திகில் கலந்த பரவசத்தை ஏற்படுத்துகிறது. கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது. 

உலகின் மிக தனிமையான வீடு

மனித வாழ்விடத்திலிருந்து வெகு தொலைவில், கடலின் வலிமையான கர்ஜனையில், சுழன்று அடிக்கும் குளிர்ந்த காற்றில், அலைகளின் பெருஞ்சத்தத்தில், வியாபித்து இருக்கும் வெறுமையின் நடுவில் தனியாக இருக்கும்போது எப்படி உணர்வீர்கள்? அதிலும் இரவில் இந்த இடம் இன்னும் வினோதமாக இருக்கும். இப்போது சொல்லுங்கள் இந்த இடத்தில் தனிமையில் தங்குவதற்கு பயப்படுவீர்களா? பரவசப்படுவீர்களா? எப்படி இருந்தாலும் அது ஒரு சாகசம்தான்! 

உலகின் மிக தனிமையான வீடு 2
எல்லிடே தீவு

இந்த தீவு ஐஸ்லாந்து நாட்டின் தெற்குப் பகுதி கடலில் அமைந்திருக்கிறது. இந்த தீவின் பெயர் எல்லிடே. இது வெஸ்ட்மன்னேஜார் என்ற தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த தீவு கூட்டத்தில் 15 முதல் 18 தீவுகள் இருக்கின்றன. 

இன்று ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிசோடிக் கிடக்கும் இந்த இடத்தில் 300 வருடங்களாக ஐந்து குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன. இந்த குடும்பங்கள் 1930-களில் தீவை விட்டு வெளியேறியது. அதன் பிறகு இந்த தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. 

அப்போதிருந்து, தீவு வெறிச்சோடியது. இப்போது இருக்கும் ஒரே வீடு உலகிலேயே மிகவும் தனிமையான வீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற வீட்டைச் சுற்றி பல வதந்திகள் உலவி வருகின்றன. 

‘ஜாம்பி’

அதில் ஒன்று ஆங்கிலப் படங்களில் காணக்கூடிய ‘ஜாம்பி’ என்ற ரத்தம் குடிக்கும் மனிதர்கள். சினிமாவில் வருவது போல் இந்த மனிதர்கள் உலகம் முழுவதும் வந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த ஒரு பணக்காரர் அங்கிருந்து தப்பித்து இங்கு வந்து தங்குவதற்காக இந்த வீட்டை கட்டினார் என்பது ஒரு கதை. 

ஐஸ்லாந்து நாட்டு பாடகர் பிஜோர்க் என்பருக்கு சொந்தமான வீடு இது என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். இதுமட்டுமல்ல இந்த வீடு, படங்கள் எல்லாமே போடோஷாப் செய்யப்பட்டது. உண்மையில் இப்படியொரு இடமே இல்லை என்று இணைய வாசிகள் ஒருபக்கம் சொல்லி வருகிறார்கள். 

உலகின் மிக தனிமையான வீடு 3

எது உண்மை?

உண்மையில், வீடு எல்லிடே தீவில் இருக்கிறது. இது எல்லிடே வேட்டை சங்கத்திற்கு சொந்தமானது. 1950களில் வேட்டையாடும் சங்கத்து உறுப்பினர்களுக்கான அவர்கள் இங்கு வந்து தங்கும் இடமாக இந்த வீடு கட்டப்பட்டது. இந்த தீவு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு பஃபின்ஸ் எனப்படும் நோர்டிக் பறவைகள் அதிகம். 

ஒரு தனியார் வேட்டைக் கிளப்பின் லாட்ஜ் என்றாலும், பார்வையாளர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் இதுபோன்ற தனிமையான வீட்டில் இரவைக் கழிப்பது வழக்கமான அனுபவம் அல்ல, குறைந்தபட்சம் ஒரு முறையாவது அதை அனுபவிப்பது வித்தியாசமான உணர்வைத் தரும்.

ஆனால் இந்த தீவிற்கு செல்வதே சவாலான ஒன்று. ஐஸ்லாந்து தீவிலிருந்து இந்த தீவிற்கு படகு ஏற்பாடு செய்து செல்ல வேண்டும். உறைய வைக்கும் குளிரில் பெரிய அலைகளுக்கு நடுவே திகிலூட்டும் பயணமாக இது இருக்கும். தீவை அடைந்தாலும் படகில் இருந்து தீவுக்குள் செல்வது இன்னும் சாகசமான நிகழ்வுதான். 

படகுத்துறை கிடையாது

இந்த தீவிற்கு படகுத்துறை என்பதெல்லாம் கிடையாது. படகிலிருந்து சரிவாக இருக்கும் தீவு பாறை மீது குதிக்க வேண்டும். அதே நொடியில் தீவில் தொங்கவிடப்பட்டுள்ள கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். அப்படி பிடிக்கவில்லை என்றால் உறைபனி கடல் நீரில் விழவேண்டி இருக்கும். 

உலகின் மிக தனிமையான வீடு 4

அந்த கயிற்றை பிடித்துக்கொண்டு பாறை மீது ஏறவேண்டும். இப்படியாக தீவின் உச்சிக்கு ஏறிவிட்டால் பரந்த பச்சை பசேலென்ற புல்வெளி நம்மை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். 

இந்த புல்வெளி மீது ஒரு குறுகிய நடை பாதை இருக்கிறது. அது வீட்டை நோக்கி செல்கிறது. மனிதர்கள் இல்லாத இந்த இடத்தில் கூட இந்த வீட்டைச் சுற்றி கம்பி வேலி அமைத்திருப்பது எதற்காக என்று தெரியவில்லை. ஒருவேளை ஏதாவது விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக இருக்குமோ என்னவோ?

வேறுவிதமான தட்பவெப்பநிலை

மரத்தாலான இந்த வெள்ளைநிற வீடு பார்ப்பதற்கு குளிர் மற்றும் அசௌகரியங்கள் நிறைந்ததாக தோன்றலாம். ஆனால், வீட்டின் உள்ளே வேறுவிதமான தட்பவெப்பநிலை உள்ளது. வசதியான இடமாக தெரிகிறது. 

உலகின் மிக தனிமையான வீடு 5

வீட்டினுள் ஒரு சாதாரண சோபா, பெரிய மேஜை அதைச் சுற்றி நாற்காலிகள் அமைக்கப்பட்ட சாப்பாட்டுப் பகுதி, குளிருக்கு இதமாக நெருப்பு உண்டாக்கும் இடம் என்று ஆச்சரியப்படும் படியாக வீடு வசதியாக உள்ளது. 

மேலும் இந்த வீட்டில் 10 நபர்கள் தங்கக்கூடிய வகையில் வசதியான படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய அறையும் இருக்கிறது. உணவு சமைக்க தேவையான உபகரணங்களுடன் கூடிய ஒரு சமையலறை உள்ளது. 

சில நாட்களுக்கு தேவையான சில உணவுப் பொருட்களுடன் கூடிய ஒரு ஸ்டார் ரூமும் உள்ளது. இந்த பொருட்களைக் கொண்டு நாமே சமைத்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். இதுபோக ஒரு குளியலறை, கழிப்பறை உள்ளது. 

இப்படி பல வசதிகள் இருந்தாலும் இந்த வீட்டில் தங்குவது சவாலான ஒன்றுதான். நம் நாட்டைப்போல் இங்கு போர்வெல் கிடையாது. மழைநீரை சேமித்து வைத்துதான் பயன்படுத்துகிறார்கள். அதனால் இங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 

சிறிய ஜெனெரேட்டர் மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது. அதுவும் இரவில் மட்டுமே அனுமதி. அதனால் மங்கலான வெளிச்சமே நிலவுகிறது. இரவு அடர்ந்த இருளாகவும் அமைதியாகவும் இருக்கும். கடல் அலைகள் சத்தம் ஒருவித மிரட்சியை ஏற்படுத்தும்.

அடர்ந்த மூடுபனி

இந்தத் தீவைச் சுற்றியிருக்கும் அடர்ந்த மூடுபனி, இந்த வீட்டை இன்னும் உலகில் இருந்து அதிகமாக தனிமைப் படுத்துகிறது. இந்த வீட்டை சுற்றி நிலவும் அசாதாரண இயல்பு மற்றும் ஏராளமான கதைகள் இருந்தாலும் ஆராய்ச்சி செய்வதற்கும், வித்தியாசமான அனுபவத்தை பெறுவதற்கும் ஓர் அற்புதமான இடம்.  

இந்த வீட்டிற்கு வந்து செல்பவர்கள் தங்கள் பெயர்களையும் அவர்கள் வந்த தேதியையும் பதிவு செய்யும் புத்தகம் ஒன்று உள்ளது. அதிலிருக்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பெயர்கள் நம்மைக்கு மேலும் ஆச்சரியப்பட வைக்கிறது. 

இங்கு செல்வது பெரிய சவாலான ஒன்றாக இருந்தாலும் சாகசம் செய்ய நினைப்பவர்களுக்கு இதுவொரு பொக்கிஷமான இடம் என்பதில் சந்தேகமில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *